சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி வெற்றி அடைந்தால் ஆட்சியில் தமிழ்நாடு பா.ஜ.க. பங்கு பெரும் என மத்திய அமைச்சர்
அமித்ஷாவும், பா.ஜ.க. மூத்த தலைவர்களும் தொடர்ந்து பேசிவருகின்றனர். கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியின
பெயரை குறிப்பிடுவதையும் அமித்ஷா தொடர்ந்து தவிர்த்து வருகிறார். இதனால் அ.தி.மு.க.தலைவர்கள், தொண்டர்கள் குழப்பம் அடைந்து உள்ளனர். ஆனால் அமித்ஷா அவ்வாறு கூறவில்லை என்று பேசி வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் பிரச்சார பயணத்தை தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில் ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதி.மு.க.
பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெரும் பட்சத்தில்
ஆட்சியில் பா.ஜ.க. நிச்சயம் பங்குபெறும் என்றும் அமித்ஷா மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பா.ம.க. த.வே.க. போன்ற சிறிய கட்சிகள் கூட்டணியில் சேர உள்ளதா? என்ற கேள்விக்கு தற்போது அதுபற்றி கூற முடியாது என்ற அமித் ஷா, தமிழ்நாட்டில் ஒத்தகருத்துடைய கட்சிகளை ஒரே மேடைக்கு கொண்டு வரமுயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க.பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித் ஷா மீண்டும் பேசியுள்ளது தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் கூறுகையில், பெரும்பான்மையுடன் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கூறினார்.
கூட்டணி ஆட்சி என்பதில் பா.ஜ.க. உறுதியாக இருக்கும் நிலையில், தனித்து அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்பதை மீண்டும் மீண்டும் எடப்பாடி பழனிசாமி உறுதிபடுத்தி வருகிறார். அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் இரு கட்சி தலைவர்களின் கருத்துக்களால் தொண்டர்களுக்கிடையே
குழப்பம் தொடர்கிறது.
செய்தி: பாபு ராஜேந்திரன், கடலூர்