/indian-express-tamil/media/media_files/2025/08/22/amit-shah-nellai-2025-08-22-17-36-43.jpg)
நெல்லையில் பா.ஜ.க-வின் குமரி மண்டலத்தைச் சேர்ந்த பூத் பொறுப்பாளர்கள் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நெல்லையில் பா.ஜ.க-வின் குமரி மண்டலத்தைச் சேர்ந்த பூத் பொறுப்பாளர்கள் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா பங்கேற்றுப் பேசினார். பா.ஜ.க பூத் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் அமித்ஷா பேசுகையில், “வரப்போகும் தேர்தலில் திமுக-வை வேரோடு பிடுங்கி எறிந்து, என்.டி.ஏ.-வின் வெற்றியை அறிவிக்க வேண்டும்” என்று கூறினார்.
தமிழகத்தில் தமிழில் பேச முடியவில்லையே என வருத்தம் தெரிவித்த அமித்ஷா, மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் பா.ஜ.க-விற்காக வாழ்க்கையை தியாகம் செய்தவர், அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் என்று கூறினார்.
தமிழக அமைச்சர்கள் குறித்துப் பேசிய அமித்ஷா, “தமிழக அமைச்சர்கள் பொன்முடியும், செந்தில் பாலாஜியும் பல மாதங்களாக இருந்துள்ளனர்; அவர்கள் ஆட்சியாளர்களாகவும் இருக்க வேண்டுமா? 130-வது சட்டத்திருத்தத்தை ‘கறுப்பு சட்டம்’ என்கிறார் ஸ்டாலின். அதை நீங்கள் சொல்ல எந்த அதிகாரமும் இல்லை. ஏனெனில் நீங்கள் கறுப்பு நடவடிக்கைகளை செய்பவர்.
இந்த நாட்டிலேயே மிகப்பெரிய ஊழல் ஆட்சி, இங்கு நடைபெற்று வரும் தி.மு.க-வின் ஆட்சிதான். சிவப்பு மணல் திருட்டு, டாஸ்மாக் ஊழல், போக்குவரத்து ஊழல், இலவச வேட்டி சேலையில் ஊழல் என்று இன்னும் ஏராளமான ஊழலை செய்கிறார்கள் இவர்கள்.” என்று அமித்ஷா தி.மு.க ஆட்சியைக் கடுமையாகச் சாடினார்.
தொடர்ந்து பேசிய அமித்ஷா, “இந்தியா (INDIA) கூட்டணிக்காரர்கள் எல்லாம் ஒரு கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள். சோனியா காந்திக்கு ஒரே லட்சியம், ராகுல் காந்தியை பிரதமராக்குவதுதான்; அதேபோல தி.மு.க-விற்கு உதயநிதியை முதலமைச்சராக்குவதுதான் இந்த இரண்டுமே நடக்காது. நான் சொல்லிக்கொள்கிறேன். உதயநிதி ஒருநாளும் முதலமைச்சராக வர முடியாது.” என்று அமித்ஷா கூறினார்.
மேலும், இந்த இரு இடங்களிலுமே (பிரதமர் - முதல்வர்) என்.டி.ஏ. கூட்டணியே வெற்றிபெறும்.வரப்போகும் தேர்தலில் தி.மு.க-வை வேரோடு பிடுங்கி எறிந்து, என்.டி.ஏ.-வின் வெற்றியை அறிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
“கடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் 18% க்கு மேல் வாக்குகள் பெற்றிருந்தோம்; கூட்டணியான அதிமுக 21% வாங்கியிருந்தனர். இதிலேயே மிக எளிமையாக 39% வாக்குகள் நமக்கு வந்துவிடுகிறது. என்.டி.ஏ கூட்டணி, வெறும் அரசியல் கூட்டணியல்ல. தமிழ் மக்களை முன்னேற்றுவதற்கான கூட்டணி இது.” என்று அமித்ஷா பேசினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.