பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க-வுடன் கூட்டணி இல்லை தனித்து போட்டியிடும் என்று கூறியதால், கூட்டணிகுள் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், அமித்ஷா அ.தி.மு.க பொதுச் செயலாளர் இ.பி.எஸ்-ஐ தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை இனி திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை. தமிழ்நாட்டில் பா.ஜ.க தனித்து போட்டியிடும் என்று என்று கூறி அ.தி.மு.க-வுடன் கூட்டணியை முறித்துக் கொள்வதாக பேசிய விவகாரம், பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அண்ணாமலையின் கருத்துக்கு மூத்த பா.ஜ.க தலைவர்கள் சிலரே எதிர்க்கருத்துகளைத் தெரிவித்தனர்.
இதனிடையே, கடந்த வாரம் நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க பொதுச் செயலாளரானார். இதன் மூலம், அ.தி.மு.க-வின் ஒற்றைத் தலைமை இ.பி.எஸ் என உறுதியானது.
அண்ணாமலையின் பேச்சால், பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி தொடருமா என்று கேள்வி எழுந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த வாரம் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமையைத் சரி செய்தார்.
இதையடுத்து, அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்த வாரம் புதுடெல்லிக்கு சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அ.தி.மு.க உடன் கூட்டணி தொடரும் அதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று கிருஷ்ணகிரியில் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் கூறிய சில நாட்களுக்குப் பிறகு, அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடர்வதற்கு எதிராக அண்ணாமலை கடும் நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க தேசியத் தலைமை முடிவு செய்தால், தான் தொண்டராக இருப்பேன் என்றும், மாநிலத் தலைவராக நீடிக்க மாட்டேன் என்றும் மார்ச் 17-ம் தேதி சென்னையில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசினார்.
ஆனால், அமித்ஷா இ.பி.எஸ்-ஐ அழைத்துள்ளார். இந்த நிகழ்வுகள் குறித்து கவலைப்பட வேண்டாம் என்றும், பாஜக தேசிய தலைமை 'கவனித்துக்கொள்ளும் என்றும் எடப்பாடி பழனிசாமியிடம் கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அடுத்த வாரம் அமித்ஷாவை சந்திக்க இ.பி.எஸ் முடிவு செய்துள்ளார் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அ.தி.மு.க தரப்பிலும் பா.ஜ.க உடனான கூட்டணி தொடர்கிறது என்று தெரிவிக்கப்பட்டது. சட்டப்போராட்டத்தில் வெற்றி பெற்று அ.தி.மு.க பொதுச் செயலாளராகி உற்சாக்த்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி, வருகிற மக்களவைத் தேர்தலை சந்திக்க பா.ஜ.க தேசியத் தலைமையுடன் உறவை வலுப்படுத்துவதில் ஆர்வமாக உள்ளார்.
ஆனால், இரு கட்சிகளிலும் உள்ள ஒரு பிரிவினர், கூட்டணி தொடர்வதை ஏற்க மறுத்தாலும், தி.மு.க தலைமையிலான எதிர்க்கட்சி பலமாக இருப்பதாக பெரும்பான்மையான கருத்து நிலவுகிறது.
அ.தி.மு.க உடன் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்திய அண்ணாமலை, தேசிய தலைமையால் அழைக்கப்பட்டு முறையான ஆலோசனை வழங்கப்பட்டு, கட்சி விதிகளை கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“பா.ஜ.க ஒரு தேசிய பார்வை கொண்ட கட்சி, தனிநபரை விட கட்சி தான் முக்கியம். கூட்டணி குறித்து தலைமை கமிட்டியில் விவாதிக்கப்பட்டு தேசிய தலைமை முடிவு செய்யும். சில திருத்தங்கள் அவசியம் என்பதை தலைமை வருத்தம் அடைந்தது” என்று பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாநிலத் தலைமையின் பேச்சுக்கு கட்டுப்படாத மூத்த தலைவர்கள், 'சமூக ஊடக வார் ரூம் ஐடிகளால் ட்ரோல் செய்யப்பட்டதாகவும், அவர்கள் டெல்லி தலைமையிடம் புகார் தெரிவிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.