Amit Shah | Nagercoil | Lok Sabha Election 2024: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
அமித்ஷா உரை
மக்களவைத் தேர்தலை ஒட்டி பிரச்சாரம் வேகமெடுத்துள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வருகை தந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தி.மு.க -வும், அ.தி.மு.க-வும் ஊழலில் ஈடுபட்டு மாநிலத்தின் வளர்ச்சியை தடுத்து விட்டனர் என குற்றம் சாட்டியுள்ளார். மேலும், 3 ஆண்டுகளுக்குள் தமிழில் பேசுவதாக சூளுரைத்துள்ளார்.
கன்னியாகுமரி தொகுதி பா.ஜ., வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் நந்தினி ஆகியோரை ஆதரித்து நாகர்கோவிலில் உள்ள தக்கலை பகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ‛ ரோடு ஷோ' நடத்தினார்.
இந்த ரோடு ஷோ முடிந்ததும் தொண்டர்கள் மத்தியில் அவர் பேசுகையில், "தமிழ் மொழி, கலாசாரம், பாரம்பரியத்தை பாதுகாக்க பிரதமர் மோடி ஓய்வின்றி உழைத்து வருகிறார். இன்னும் 3 ஆண்டுகளுக்குள் இதே இடத்தில் தமிழில் பேசுவேன். அனைவரையும் ஒருங்கிணைத்து தமிழகத்தில் வளர்ச்சியை ஏற்படுத்த பா.ஜ.க விரும்புகிறது. ஆனால், தி.மு.க. -வும், அ.தி.மு.க-வும் ஊழலில் ஈடுபட்டு மாநிலத்தின் வளர்ச்சியை தடுத்து விட்டனர்.
3-வது முறை மோடி பிரதமராக பதவியேற்றால், உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியா 3-வது இடத்தை பிடிக்கும். 400-க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜ.க வெற்றி பெறும் என அனைவரும் பேசுகின்றனர். நாட்டை பாதுகாப்பாகவும், முன்னர் இல்லாத அளவு வளர்ச்சியடைந்ததாகவும் மோடி வைத்துள்ளார். சனாதானத்தை இழிவுபடுத்தி மக்களின் உணர்வுகளை தி.மு.க காயப்படுத்தி விட்டது. ஆனால், பா.ஜ.க அனைவரையும் மதிக்கிறது." என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“