தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த நிவர் புயல் இன்று அதிகாலை இரண்டரை மணியளவில் தமிழகத்திற்கும் புதுச்சேரிக்கும் இடையே மரக்காணம் அருகே கரையைக் கடந்தது.
இருப்பினும்,பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருவதாலும், சில பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது.
தமிழகத்தின் நிலப்பரப்பில் நிவர் தீவிரப் புயலாக நகர்ந்து வரும் நிலையில், இது வலுவிழந்து புயலாக மாறும் என்றும், அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், பின்னர் தாழ்வு மண்டலம் என மேலும் வலுவிழக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் புயல் நிலவரம் குறித்து தீவிரமாக கண்காணித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட ட்விட்டர் அறிக்கையில், "தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் புயல் நிலவரம் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம். தமிழக முதல்வர்
எடப்பாடி பழனிசாமி, புதுவை முதல்வர் நாராயணசாமி
உடன் பேசி மத்திய அரசு சார்பில் உதவிகளை செய்வதாக உறுதி அளித்தேன். பாதிக்கபட்ட இடங்களில் பொதுமக்களுக்கு உதவ தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளனர்" என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, நிவர் புயல் காரணமாக நிறுத்தப்பட்ட பேருந்து சேவைகள் இன்று நண்பகல் 12 மணிமுதல் வழக்கம்போல் இயங்கும் என்று தமிழக அரசு தெரிவித்தது. மேலும், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரத்து செய்யப்பட்ட தாம்பரம் - ஹைதராபாத் சிறப்பு ரயில், நிலைமை சீரானதால் இன்று வழக்கம் போல் இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்தது.