'பொறியியல், மருத்துவ படிப்புகளை தமிழில் கற்பிக்க வேண்டும்': ஸ்டாலினுக்கு அமித்ஷா வலியுறுத்தல்

'இப்போது பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் தமிழிலும் தேர்வை எழுத முடியும் என்பதை உறுதி செய்துள்ளது' என தமிழ்நாட்டில் நடைபெற்ற நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Stalin and Amitshah

இந்தி திணிப்பு மற்றும் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு போன்ற பிரச்சனைகள் தொடர்பாக மத்திய அரசை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டி வரும் நிலையில், இங்கு பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளை தமிழில் கற்பிக்க வேண்டும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: ‘Impart engineering, medical education in Tamil’: Amit Shah urges Stalin amid language row

 

Advertisment
Advertisements

ராணிப்பேட்டையில் உள்ள தக்கோலத்தில் சி.ஐ.எஸ்.எஃப்-ன் 56-வது ஆண்டு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, "சி.ஐ.எஸ்.எஃப் தேர்வுக்கு தயாராகி வரும் நபர்கள் அனைவரும்  தங்கள் பிராந்திய மொழியிலேயே தேர்வு எழுதும் வகையில் மாற்றங்களை, நரேந்திர மோடியின் அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது" எனக் கூறினார்.

"இப்போது பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம், தமிழிலும் தேர்வு எழுதுவதை உறுதி செய்துள்ளது" என்று அமித்ஷா தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டின் கலாசாரத்தை பாராட்டிய அமித்ஷா, இது இந்திய கலாசாரத்தை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் தெரிவித்தார்.

"நிர்வாகச் சீர்திருத்தங்கள், ஆன்மிகம், கல்வி அல்லது தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு என எதுவாக இருந்தாலும், இந்திய கலாச்சாரத்தை ஒவ்வொரு துறையிலும் தமிழ்நாடு வலுப்படுத்தியுள்ளது" என்று அமித்ஷா கூறினார்.

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த சில வாரங்களாக பா.ஜ.க-வுக்கு எதிராக ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார்.

அமித்ஷாவின் வருகைக்கு முன்னதாக, தேசியக் கல்விக் கொள்கையின் ஒரு பகுதியான மும்மொழிக் கொள்கை தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. "வரலாறு தெளிவாக உள்ளது. தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயன்றவர்கள் தோற்கடிக்கப்பட்டனர் அல்லது பின்னர் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு தி.மு.க-வுடன் இணைந்துள்ளனர்.  பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கு மாற்றாக உள்ள இந்தி காலனித்துவத்தை தமிழ்நாடு பொறுத்துக் கொள்ளாது" என ஸ்டாலின் கூறியிருந்தார்.

ஸ்டாலின், கடந்த வியாழனன்று பா.ஜ.க-வை ஆதிக்க மனநிலை கொண்ட இயக்கம் என விமர்சித்தார். குறிப்பாக, தேசியக் கல்விக் கொள்கைக்கு ஆட்சேபனை தெரிவிக்கும் மாநில மக்களுக்கான நிதியை மறுத்து, அவர்கள் இரண்டாம் தர குடிமக்கள் போன்று நடத்தப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.

தேசியக் கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கை தொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன், முதலமைச்சர் ஸ்டாலின் வார்த்தை போரில் ஈடுபட்டுள்ளார். "தேசியக் கல்விக் கொள்கை, மாநிலங்களில் இந்திய திணிக்கவில்லை. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு அரசியல் செய்கிறது. தேசியக் கல்விக் கொள்கை 2020-ல் இந்தி மட்டுமே இருக்கும் என நாங்கள் ஒரு போதும் சொல்லவில்லை. தாய்மொழியில் கல்வி அமையும். தமிழ்நாட்டில் அது தமிழிலேயே இருக்கும்" என பிரதான் கூறினார்.

"சிலரது அரசியல் காரணங்களுக்கு நான் பதிலளிக்க விருபவில்லை. தேசியக் கல்விக் கொள்கை 2020, பல்வேறு மொழிகளில் கவனம் செலுத்துகிறது. அது, இந்தி, தமிழ், ஒடியா அல்லது பஞ்சாபி என அனைத்து மொழிகளுக்கும் சம முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. அரசியல் காரணமாக தமிழ்நாட்டில் இதனை சிலர் எதிர்க்கின்றனர்" என்று பிரதான் தெரிவித்தார்.

சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் ரூ. 2,152 கோடி நிதியை தமிழ்நாட்டிற்கு வழங்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. மும்மொழிக் கொள்கை அடங்கிய தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்காதவரை நிதியை விடுவிக்க முடியாது என பிரதான் தெரிவித்திருந்தார். இது, தமிழ் மொழி மீதான தாக்குதல் எனவும், மாநிலத்தில் உணர்ச்சிப்பூர்வமான பிரச்சனையை ஏற்படுத்தும் என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

கடந்த வாரம், பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதியதில், இந்த தொகையை விடுவிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான மத்திய அரசு, இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில் தான் தேசிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறியது.

திராவிடக் கருத்தியல் முக்கியத்துவம் வாய்ந்த தமிழ்நாடு, இந்தி எதிர்ப்புப் போராட்டங்களின் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி தமிழ்நாடு கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இந்த தேர்வுக்கு பலமுறை எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க தலைமையிலான அரசு, இதனை ரத்து செய்து மாநிலத்தில் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது.

Cm Mk Stalin Amitshah

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: