அதிமுக – பாஜக கூட்டணியை நிர்ணயிக்கும் லஞ்ச்; அமித்ஷா வருகை எதிர்பார்ப்பு

நவம்பர் 21ம் தேதி தமிழகம் வரும் அமித்ஷா அன்று மதிய உணவின் போது அதிமுகவின் முக்கிய தலைவர்களை சந்திக்க உள்ளதாகவும் அதிமுக - பாஜக கூட்டணியை இந்த லஞ்ச் சந்திப்புதான் நிர்ணயிக்கப்போகிறது என்றும் கூறப்படுகிறது.

By: Updated: November 19, 2020, 07:12:13 AM

நவம்பர் 21ம் தேதி தமிழகம் வரும் அமித்ஷா அன்று மதிய உணவின் போது அதிமுகவின் முக்கிய தலைவர்களை சந்திக்க உள்ளதாகவும் அதிமுக – பாஜக கூட்டணியை இந்த லஞ்ச் சந்திப்புதான் நிர்ணயிக்கப்போகிறது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், ஆளும் அதிமுக, எதிர்க்கட்சியான திமுக, மத்தியில் ஆளும் பாஜக என அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு வேகமாக ஆயத்தமாகி வருகின்றன.

அடுத்த ஆண்டு வருகிற சட்டமன்றத் தேர்தலில், கடந்த மக்களவைத் தேர்தலில் அமைந்த கூட்டணியே அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக கட்சிகளில் உள்ள தலைவர்களின் அவ்வப்போதைய பேச்சுகள் கூட்டணி தொடருமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

அதே நேரத்தில், அதிமுக அரசு தடை விதித்தாலும் பாஜக வேல் யாத்திரையை தொடர்ச்சியாக நடத்துவதும் தலைவர்கள் கைதாகி விடுதலையாவதுமாக நடந்துவருகிறது.

இந்த சூழலில்தான் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜகவின் தேர்தல் வியூக சூத்ரதாரியுமான அமித்ஷா நவம்பர் 21ம் தேதி தமிழகம் வருகை தருகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் வருகை தரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகத்தில் ரூ.67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகையில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் புதிய நீர்த்தேக்கத் திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்கு அர்பணிக்க உள்ளார். ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ஆம் கட்டம், ரூ.1,620 கோடி மதிப்பீட்டில் கோவை – அவிநாசி உயர்மட்ட சாலைத் திட்டம், கரூர் மாவட்டம், நஞ்சை புகலூரில் ரூ.406 கோடி மதிப்பீட்டில் காவேரி ஆற்றின் குறுக்கே கதவணைத் திட்டம், ரூ.309 கோடி மதிப்பீட்டில் சென்னை வர்த்தக மையம் விரிவுபடுத்தும் திட்டம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் திட்டங்களான வல்லூரில் ரூ.900 கோடி மதிப்பீட்டில் பெட்ரோலியம் முனையம் உள்ளிட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

அரசு நிகழ்சிகளில் பங்கேற்கும் அமித்ஷா, மதியம் உணவுக்கு சென்னையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், முக்கிய அமைச்சர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சந்திப்பின் போது, சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்று அதிமுக தலைவர்களிடம் கேட்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 50 இடங்களுக்கு மேல் எதிர்பார்ப்பதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றனர். அதிமுகவுக்கு பாஜக கௌரமான எண்ணிக்கையில் இடங்களை ஒதுக்காவிட்டால், பாஜக தனியாக ஒரு அணியை அமைக்கும் முயற்சியை முன்னெடுக்கத் தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால், இந்த லஞ்ச் சந்திப்பில், அதிமுகவில் இருந்து முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்ச் செல்வம் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அளிக்கும் பதிலில்தான் அதிமுக – பாஜக கூட்டணி நிர்ணயிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அமித்ஷாவுடனான சந்திப்பின்போது, எப்படி அதிமுகவின் பதில் அமைய வேண்டும் என்பது குறித்து அதிமுக தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

அமித்ஷா வருகைக்குப் முன்னதாக, நவம்பர் 20ம் தேதி அதிமுக தேர்தல் ஆலோசனை கூட்டத்திற்கு அதிமுக நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதனால், அதிமுகவின் இந்த கூட்டமும் முக்கியத்துவம் பெறுவதாக உள்ளது. இந்த கூட்டத்தில், மறுநாள் அமித்ஷாவுடனான சந்திப்புக்கு அதிமுக தரப்பில் இருந்து எவ்வாறு பதிலளிப்பது என்று முடிவெடுப்பார்கள் என்று தெரிகிறது.

உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக தலைவர்களுடனான சந்திப்புக்குப் பிறகு, கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. சென்னையில் அமித்ஷாவை, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்கவிருகிறார்.

அமித்ஷாவின் தமிழகம் வருகையில், முக அழகிரி மற்றும் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பார்களா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை ரகசியமாகவே இருக்கிறது.

இந்த சந்திப்புகளுக்குப் பிறகு, உள்துறை அமைச்சர் அமித்ஷா சில சமுதாயத் தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமித்ஷாவின் இந்த சந்திப்புகள் முடிவடைந்ததும், மறுநாள் காலை அவர் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

ஆகையால், தமிழகம் வருகை தரும் அமித்ஷா, அன்றைக்கு அதிமுக தலைவர்களுடன் நடத்தும் லஞ்ச் சந்திப்புதான் அதிமுக – பாஜக கூட்டணியை நிர்ணயிக்கப்போகிறது என்று தெரிகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Amit shah tamil nadu visit lunch meets with aiadmk leaders eps ops

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X