/indian-express-tamil/media/media_files/2025/09/04/amit-shah-tells-tn-bjp-to-strengthen-alliance-ops-ttv-dhinakaran-exits-nda-tamil-news-2025-09-04-10-02-18.jpg)
தமிழக பா.ஜ.க மூத்த தலைவர்களை சந்தித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அ.தி.மு.க-வுடன் சிறந்த ஒற்றுமையை வளர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கும் சூழலில், இப்போதே பிரச்சாரம் அனல் பறந்து வருகிறது. அதே நேரத்தில் கூட்டணி தொடர்பான முடிவுகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆளும் தி.மு.க தலைமையில் வலுவான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமைந்திருக்கிறது. அதனை முறியடித்து மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர பிரதான எதிர்க் கட்சியான அ.தி.மு.க திட்டமிட்டு, அதன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், 2021 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரது தலைமையிலான அ.தி.மு.க, 2024-ல் அக்கூட்டணியில் இருந்து வெளியேறியது. அதனைத் தொடர்ந்து, கட்சிக்குள் கிளர்ச்சியை ஏற்படுத்தியது ஓ.பன்னீர் செல்வம் ஓரம் கட்டப்பட்டு, அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி உயர்ந்தார். அதன்பின், அ.தி.மு.க முன்னோடிகளை முன்னாள் பா.ஜ.க மாநில தலைவர் விமர்சனம் செய்ததை குறிப்பிட்டு, அ.தி.மு.க பா.ஜ.க உடனான கூட்டணியை முறித்துக் கொண்டது.
தொடர்ந்து பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இப்போது மீண்டும் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி உருவாகியுள்ளது. இதற்கிடையில், 2024 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் படுதோல்வியை சந்தித்தார். இதையடுத்து, அவரை பா.ஜ.க ஓரம் கட்டிய நிலையில், தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி அளிக்கவில்லை. அதனால், விரக்தியடைந்த அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு அமைப்பு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது. இதேபோல், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்வது பற்றி டிசம்பரில் அறிவிப்பதாக தெரிவித்த அ.ம.மு.க தலைவர் டி.டி.வி தினகரன், தனது முடிவை நேற்றே அறிவித்து விட்டார். காட்டுமன்னார்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், துரோகம் தலைவிரித்தாடுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்ற அறிவிப்புகளை ஏற்கனவே எதிர்பார்த்த அமித் ஷா, தமிழ்நாட்டில் கூட்டணியை வலுப்படுத்துவதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க கூறியிருக்கிறார். டெல்லியில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல். முருகன், மூத்த தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், பொன் ராதாகிருஷ்ணன், எச். ராஜா, வானதி ஸ்ரீனிவாசன், கேசவ விநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். பா.ஜ.க மத்திய பார்வையாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி ஆகியோரும் கலந்து கொண்டனர். ஆனால், முன்னாள் மாநில பா.ஜ.க தலைவர் கே. அண்ணாமலை மட்டும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
கூட்டத்தில் அமித் ஷா, மாநில பா.ஜ.க தலைவர்கள் அ.தி.மு.க-வுடன் சிறந்த ஒற்றுமையை வளர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி உத்தி, பிரச்சார ஒருங்கிணைப்பு மற்றும் நிறுவனப் பிரச்சினைகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக பா.ஜ.க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். கூட்டத்தில் அண்ணாமலை மீதான புகார்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி இந்த மாத இறுதியில் தமிழ்நாட்டில் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கட்சிக்குள் இதுபோன்ற கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டடு இருப்பதை கேள்வி எழுப்பிய அமித் ஷா, மோடியின் வருகைக்கு முன்னர் வேறுபாடுகளை களையுமாறு கட்டளையிட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு பா.ஜ.க-வில் உள்ள கோஷ்டி மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை ஷா வலியுறுத்தியுள்ளார். அதேபோல், வெளிப்படையான உட்பூசல்கள் கட்சியின் வாய்ப்புகளை பலவீனப்படுத்தக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.
அ.தி.மு.க-வுடன் சிறந்த ஒற்றுமையை உறுதிசெய்யவும், மேலும் கூட்டணிக் கட்சிகளை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கொண்டு வருவதற்கான வழிகளை ஆராயவும் மாநிலத் தலைமையிடம் அவர் திட்டவட்டமாகக் கேட்டுக் கொண்டுள்ளார். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தக் கூட்டம், தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத்திற்கான கூட்டுப் பிரச்சார அட்டவணையைத் தயாரிக்க வேண்டும் என்ற ஷாவின் வழிகாட்டுதலுடன் முடிந்தது.
இதற்கிடையில், முக்கிய வேலையின் காரணமாக அண்ணாமலை டெல்லி கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என்று அவருக்கு நெருக்கமான பா.ஜ.க நிர்வாகிகள் சிலர் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அவர் இல்லாதது கட்சி விவகாரங்களில் இருந்து அவர் ஒதுக்கப்பட்டதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்ற ஊகங்கள் பரவலாக எழுந்துள்ளது. அண்மையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னைக்கு வந்து, கட்சி மூத்த நிர்வாகிகளுடன் நடத்திய கூட்டத்தில் அண்ணாமலை கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.