அதிமுக அணியில் பாமக-7, பாஜக-5: ஒரே நாளில் அடுத்தடுத்து தொகுதி பங்கீடு அறிவிப்பு

பாமக.வுக்கு 7 மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவைத் தொகுதி, பாஜக.வுக்கு 5 தொகுதிகள் என ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டிருக்கிறது.

AIADMK – BJP Alliance Talk: அதிமுக அணியில் இன்று (பிப்ரவரி 19) அடுத்தடுத்து தொகுதி பங்கீடு அறிவிப்புகள் வெளியாகின. பாமக.வுக்கு 7 மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவைத் தொகுதி, பாஜக.வுக்கு 5 தொகுதிகள் என ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டிருக்கிறது.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை எட்டியது. அதிமுக அணி இன்று தனது கூட்டணிப் பேச்சுவார்த்தையை விறுவிறுப்பாக நடத்தியது. பாஜக தலைவர் அமித் ஷா இன்று சென்னை வந்து அதிமுக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் கடைசி நேரத்தில் அமித்ஷா பயணம் ரத்து ஆனது.

அதன்பிறகு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தமிழகம் வந்தார். இதற்கிடையே எந்த முன்னறிவிப்பும் இன்றி பாமக தலைவர் ராமதாஸ், திடீரென அதிமுக தலைவர்களை சந்தித்தார். ஒரே நாளில் பாமக, பாஜக.வுடன் தொகுதி பங்கீடை முடிவு செய்து அறிவித்தது அதிமுக. இதன் லைவ் நிகழ்வுகளை காணலாம்.

AIADMK – BJP Alliance Talk : அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை

6:30 PM: விஜயகாந்தை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்ததாகவும், அவருக்கு தனது சார்பிலும் மோடி, அமித்ஷா சார்பில் வாழ்த்து தெரிவித்ததாகவும் பியூஷ் கோயல் பின்னர் நிருபர்களிடம் கூறினார்.

தேமுதிக.வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை தொகுதி எண்ணிக்கையில் உடன்பாடு எட்டப்படவில்லை எனத் தெரிகிறது.

5:55 PM: தேமுதிக தலைவர் விஜயகாந்தை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சாலிகிராமம் இல்லத்தில் சந்தித்தார். இதைத் தொடர்ந்து அதிமுக தலைவர்களும் விஜயகாந்தை சந்தித்து கூட்டணியை இறுதி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

5:30 PM; அதிமுக-பாஜக-பாமக கூட்டணி பலவீனமான கூட்டணி என்றும், 40 தொகுதிகளிலும் இந்தக் கூட்டணி தோற்கும் என்றும் அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருக்கிறார்.

அதிமுக-பாஜக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என கருணாஸ் எம்.எல்.ஏ கருத்து தெரிவித்தார். அதிமுக-பாஜக கூட்டணியைக் கண்டித்து அதிமுக அணியில் இருந்து விலகுவதாக தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. கூறியிருக்கிறார்.

5:00 PM: சென்னை ஆழ்வார்பேட்டை கிரவுன் பிளாசா ஹோட்டலில் நடைபெற்ற அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. அதன் முடிவாக பாஜக.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதாக அறிவிக்கப்பட்டது. வர இருக்கிற 21 சட்டமன்றத் தொகுதிகள் இடைத்தேர்தலில் அதிமுக.வுக்கு பாஜக ஆதரவு கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இந்தக் கூட்டணி ஒப்பந்தத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையொப்பமிட்டனர்.

3:00 PM: இதற்கிடையே டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது இல்லத்திற்கு தமிழக காங்கிரஸ் முக்கியத் தலைவர்களை அழைத்து பேசினார். முன் தினம் கனிமொழி, ராகுல் காந்தியை சந்தித்து பேசிய நிலையில் ராகுல் காந்தி தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதி எண்ணிக்கையை உறுதி செய்ததாக தெரிகிறது.

14:20 PM –  முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை நடத்த கிரவுன் பிளாசா ஹோட்டலுக்கு வந்துள்ளனர். இன்னும் சிறிது நேரத்தில் கூட்டணி குறித்தும், தொகுதிகள் குறித்தும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

14:00 PM – பியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை நடந்த அதிமுக அமைச்சர் தங்கமணி, வேலுமணி ஆகியோர் கிரவுன் பிளாசா ஹோட்டலுக்கு வந்துள்ளனர்.

13:30 PM – பியூஷ் கோயல் ஹோட்டலுக்கு வந்திருக்கும் நிலையில், தேமுதிவின் சுதீஷ் இன்னும் சிறிது நேரத்தில் அங்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

13:00 PM – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கிரவுன் பிளாசா ஹோட்டலுக்கு வந்தார்.

12:30 PM – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்தடைந்தார்.

12:20 PM – கூட்டணிக்காக அதிமுகவிடம் பாமக முன்வைத்த 10 கோரிக்கைகள்! முழு விவரம்

11:40 AM – பின்னர் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், “அதிமுகவுடனான கூட்டணி மெகா கூட்டணி. மக்கள் நலக் கூட்டணி, வெற்றிக் கூட்டணி. புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் இந்தக் கூட்டணி வெற்றிப் பெறும். அதிமுக கூட்டணியில் இணைய 10 கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறோம்.

படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவது, படிப்படியாக மணல் குவாரிகளை மூடுவது, ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதை தடுக்க வேண்டும், ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன்வைத்து அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளோம்” என்றார்.

11:25 AM – மக்களவை தேர்தலில் பாமகவுக்கு 7 இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாநிலங்களவையில் 1 இடம் ஒதுக்கீடு. அதேபோல், 21 தொகுதிக்கான இடைத்தேர்தலில் பாமக அதிமுகவுக்கு முழு ஆதரவு அளிக்கும். எந்தெந்த தொகுதிகள் என்று பின்னர் அறிவிக்கப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

11:10 AM – அதிமுக – பாமக கூட்டணி உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், பாமகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல் இன்னும் சிறிது நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

10:55 AM – மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக அதிமுக – பாமக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

10: 45 AM – கிரவுன் பிளாசா ஹோட்டலில் நடைபெறும் அதிமுக – பாமக கூட்டணி பேச்சுவார்த்தையில், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

10: 35 AM – சென்னை நந்தனம் அருகே உள்ள கிரவுன் பிளாசா ஹோட்டலில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பாமக நிறுவனர் ராமதாஸை வரவேற்றனர். ராமதாஸுக்கு முதல்வர் பழனிசாமி பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

10: 25 AM – அமித் ஷா வருகை ரத்து செய்யப்பட்டாலும், மத்திய அமைச்சரும் பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் இன்று மதியம் 12:15 மணிக்கு சென்னை வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close