சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, விமான நிலையத்துக்கு வெளியே திரண்டிருந்த பாஜக தொண்டர்களைப் பார்த்து திடீரென காரைவிட்டு இறங்கி சாலையில் நடந்தபடி கையசைத்தார். இதனை சற்றும் எதிர்பாராத பாஜக தொண்டர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.
தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கிவைக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (நவம்பர் 21) மதியம் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், பாஜக தலைவர்கள் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், இல கணேசன், ஹெச்.ராஜா ஆகியோர் மத்திய அமைச்சர் அமித்ஷாவை வரவேற்றனர். பின்னர், விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்ட அமித்ஷா, விமான நிலையத்துக்கு வெளியே அவரை வரவேற்க பாஜக தொண்டர்கள், அதிமுக தொண்டர்கள் கூட்டமாக திரண்டிருந்தனர். பாஜக தொண்டர்கள் செண்டை மேளம், தப்பாட்டம் ஆகிய மேள தாளத்துடன் நடனமாடி அமித்ஷாவை உற்சாகம் பொங்க வரவேற்றனர்.
திரளான பாஜக தொண்டர்களைப் பார்த்த மத்திய அமைச்சர் அமித்ஷா யாரும் எதிர்பார்க்காத வகையில் அவருடைய காரை நிறுத்தச் சொல்லி காரில் இருந்து கீழே இறங்கி சாலையில் நடந்தபடி கையசைத்து பாஜக தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
அமித்ஷா காரிலேயே சென்றுவிடுவார், அவரை நேரடியாக சரியாக பார்க்க முடியாது என்று நினைத்திருந்த பாஜக தொண்டர்களுக்கு அவர் இப்படி திடீரென காரைவிட்டு இறங்கி சாலையில் நடந்துகொண்டே பாஜக தொண்டர்களைப் பார்த்து கையசைத்து உற்சாகப்படுத்தியது பாஜக தொண்டர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.
சாலையில் சிறிது தூரம் நடந்து சென்ற அமித்ஷா, பின்னர் காரில் புறப்பட்டு சென்றார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”