/indian-express-tamil/media/media_files/2025/06/08/nO3b3M9A2zeCG0RGRMYE.jpg)
தமிழ்நாட்டில் வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க-வை மக்கள் தூக்கி எறிவார்கள் என்றும், பா.ஜ.க நிச்சயம் மலரும் என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பா.ஜ.க சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்று (ஜூன் 7) இரவு மதுரைக்கு வருகை தந்தார். அவருக்கு பா.ஜ.க-வினர் தரப்பில் இருந்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பா.ஜ.க உயர்மட்டக்குழு உறுப்பினர்களுடன் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார். மேலும், இன்று (ஜூன் 8) காலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அவர் சாமி தரிசனம் செய்தார். இந்நிலையில், இன்று மாலை ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்றக் கூட்டத்தில் அமித்ஷா உரையாற்றினார்.
அதன்படி, "மதுரையில் சொக்கநாதர், கள்ளழகர், முருகனை வணங்கி எனது உரையை தொடங்குகிறேன். தமிழ்நாட்டிற்கு வந்து விட்டு, தமிழ் மொழியில் பேச முடியாதது குறித்து வருத்தப்படுகிறேன். ஜூன் 22-ஆம் தேதி நடைபெறும் முருகன் மாநாட்டை இங்கு சிறப்பாக நடத்த வேண்டும்.
ஆப்ரேஷன் சிந்தூருக்கு, தமிழ்நாட்டில் இருந்து மிகப்பெரிய ஆதரவு குரல் ஒலித்தது. பஹல்காமில் மக்களை கொன்றவர்களை, முப்படையின் உதவியோடு மோடி அழித்தார். மோடியின் ஆட்சியில் அனைத்து துறைகளையும் போன்று, ராணுவத்திலும் ஆத்ம நிர்பர் மூலம் தன்னிறைவு உள்ளது.
அமித்ஷாவால் தி.மு.க-வை தோற்கடிக்க முடியாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். அமித்ஷாவால் அது முடியாது; ஆனால் நாட்டு மக்கள், தி.மு.க-வை தோற்கடிக்க தயாராக இருக்கின்றனர். மக்களின் நாடித்துடிப்பை உணர்ந்தவன் என்ற முறையில் கூறுகிறேன்; தி.மு.க-வை மக்கள் தூக்கி எறிவார்கள்.
2024-ஆம் ஆண்டில் பிரதமராக மீண்டும் மோடி பொறுப்பேற்ற போது, ஒடிசா, ஹரியானாவில் வென்றோம். மகாராஷ்டிராவிலும் இதுவரை இல்லாத அளவிற்கான வெற்றியை பா.ஜ.க பதிவு செய்தது. 2025-ஆம் ஆண்டில் டெல்லியில் கெஜ்ரிவாலின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, 27 ஆண்டுகளுக்கு பிறகு பா.ஜ.க ஆட்சி அமைத்தது. இதேபோல், 2026-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பா.ஜ.க ஆட்சி கண்டிப்பாக மலரும்.
தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் தி.மு.க, ஊழலில் திளைத்து நிற்கிறது. மத்திய அரசு வழங்கும் நிதியை, மக்கள் நலனுக்கு தி.மு.க செலவிடவில்லை. மக்களுக்கு நன்மை கிடைக்காத வகையில் தி.மு.க செயல்படுகிறது. விலைவாசி உயர்வாலும், வாழ்வாதார அச்சத்தாலும் வாழ முடியாத சூழலில் தமிழ்நாட்டு மக்கள் உள்ளனர்.
நாட்டின் பிரச்சனை குறித்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அக்கறை இல்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்களால், தமிழ்நாடு மலிந்து காணப்படுகிறது. ஆனால், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இது குறித்த அக்கறை இல்லை.
தமிழ்நாட்டில் பாடத் திட்டத்தை தமிழில் தர மறுப்பது ஏன்? தமிழ்நாட்டில் உயர்கல்வி பாடத் திட்டம் உடனடியாக தமிழில் இயற்றப்பட வேண்டும். தமிழ்நாட்டின் மரபு சின்னமான செங்கோலை, உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்று பெருமை சேர்த்தது மோடி தான்" என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.