டிடிவி.தினகரன் தொடங்கும் புதிய கட்சியின் பெயர் அம்மா திமுக?

டிடிவி.தினகரன் ஆரம்பிக்கும் புதிய கட்சியின் பெயர் அம்மா திமுக என இருக்கும் என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.

டிடிவி.தினகரன் ஆரம்பிக்கும் புதிய கட்சியின் பெயர் அம்மா திமுக என இருக்கும் என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் சசிகலாவை முதல்வராக்க முயற்சி நடந்தது. இதனால் கட்சி உடைந்தது. இப்போது ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையிலான அணியிடம் கட்சியும் சின்னத்தையும் தேர்தல் கமிஷன் ஒதுக்கியுள்ளது. சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருப்பதால், டிடிவி.தினகரன் கட்சி நடவடிக்கைகளை கவனிக்கிறார்.

ஜெயலலிதா போட்டியிட்டு வென்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு சுமார் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார், டிடிவி.தினகரன். ஆட்சியும், இரட்டை இலை சின்னமும் இருந்தும் ஓபிஎஸ் – இபிஎஸ் அணியால் வெற்றி பெற முடியாமல் போனது, அவர்களுக்கு சோர்வை ஏற்படுத்தியுள்ளது.

டிடிவி.தினகரன் வெற்றி அதிமுகவை ரொம்பவே பாதித்து இருக்கிறது. இதனால் உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த முடிவெடுத்து அதற்கான வேலைகளை செய்து வருகிறது, தமிழக அரசு. உள்ளாட்சி தேர்தல் வரும் போது, டிடிவி.தினகரன், ஏதேனும் ஒரு கட்சியை தொடங்கியாக வேண்டும். அப்போதுதான், அவருடைய ஆதரவாளர்களுக்கு ஓரே சின்னம் தமிழகம் முழுவதும் கிடைக்கும்.

இந்நிலையில் டிடிவி.தினகரன் புதுவையில் இன்று நிருபர்களிடம் பேசினார். அப்போது, ‘எம்.ஜி.ஆர் பிறந்த நாளான நாளை புதுக்கட்சி தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகும்’ என தெரிவித்தார். ஊட்டியில் ஜெயலலிதா திறந்து வைத்து எம்.ஜி.ஆர். சிலைக்கு நாளை டிடிவி.தினகரன் மாலை அணிவிக்கிறார். அப்போது புதுக்கட்சி குறித்து அறிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் டிடிவி.தினகரனின் தீவிர ஆதரவாளர் ஒருவரிடம் பேசிய போது, ‘அதிமுகவுக்கு சொந்தம் கொண்டாடும் வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. உள்ளாட்சி தேர்தல் வருமானால் போட்டியிட ஓரே சின்னம் தேவை. எனவே புது கட்சி தொடங்க வேண்டிய அவசியத்தை சசிகலாவிடன் சொல்லி அனுமதி பெற்றுவிட்டார். கட்சியின் பெயர் கூட அம்மா திமுக என்று வைக்கலாம் என்று அவருக்கு எண்ணம் இருக்கிறது. கட்சியில் சிலரோ திராவிடம் என்ற வார்த்தை இல்லாமல் இருந்தால் நல்லது என்றும் சொல்லியிருக்கிறார்கள். அம்மா திமுக என்று வைத்தால் அது அதிமுக என்பது போலவே வரும் என்பதால் அந்த பெயரை வைக்க வாய்ப்பு இருக்கிறது’’ என்றார்.

×Close
×Close