Advertisment

இ.பி.எஸ்-ஐ சந்தித்த திருச்சி மனோகரன்: அடுத்தடுத்து அ.தி.மு.க-வில் ஐக்கியமாகும் டி.டி.வி ஆதரவாளர்கள்

திருச்சி மாவட்ட அமமுக செயலாளரும் அக்கட்சியின் பொருளாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஆர்.மனோகரன், அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அதிமுகவில் இணைந்த திருச்சி மனோகரன்

திருச்சி மாவட்ட அமமுக செயலாளரும் அக்கட்சியின் பொருளாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஆர்.மனோகரன், அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தாய் கழகமான அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அமமுகவின் திருச்சி மண்டலத்தில் பெயர் சொல்லக்கூடிய ஒரு அரசியல் பிரமுகரை அமமுக இழந்துள்ளதால் அக்கட்சியினை சார்ந்த பலரும் அடுத்த கட்ட அரசியல் நகர்வுக்கு தங்களை தயார்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.

Advertisment

 எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராகப் பதவியேற்றுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளனர். அடுத்தடுத்து நீதிமன்றங்களில் ஈபிஎஸ்ஸுக்கு சாதகமான உத்தரவுகளே கிடைத்ததால், எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியுள்ளது.

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளது. இது அவரது தரப்புக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. இந்நிலையில், ஓபிஎஸ், தினகரன் ஆதரவாளர்கள் அடுத்தடுத்து எடப்பாடி பழனிசாமி பக்கம் தாவி வருகின்றனர்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமியை கடுமையாக அட்டாக் செய்து பேசி வந்த நிலையில், அடிமடியிலேயே கை வைத்து முக்கிய நிர்வாகிகளை தன் பக்கம் இழுத்து வருகிறார் ஈபிஎஸ். கடந்த 2 மாதங்களாக அமமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் அடுத்தடுத்து அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.

அந்தவகையில், அமமுக மாநில இளைஞரணி செயலாளராகவும், அமமுக செய்தி தொடர்பாளராகவும் இருந்த கோமல் அன்பரசன் கடந்த மார்ச் 12-ம் தேதி எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

அமமுக தலைமை நிலைய செயலாளராகவும், மதுரை மண்டல பொறுப்பாளராகவும் செயல்பட்டு, பின்னர் தினகரனுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் அக்கட்சியில் இருந்து விலகி சசிகலா ஆதரவாளராகச் செயல்பட்டு வந்த திருப்பத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ கே.கே.உமாதேவனும் அதிமுகவில் இணைந்தார்.

அவர்களைத் தொடர்ந்து, அமமுக மாநில இளம்பெண்கள் பாசறைச் செயலாளர் டாக்டர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். நேற்று முன்தினம் அமமுக தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளரும், ஒரத்தநாடு பேரூராட்சி சேர்மனுமான மா.சேகர் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.

இந்நிலையில், அமமுகவின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் எம்.எல்.ஏவுமான திருச்சி ஆர்.மனோகரன் இன்று எடப்பாடியை அவரது இல்லத்தில் சந்தித்து தன்னை தாய் கழகமான அதிமுகவில் இணைந்துக்கொண்டார்.

ஆர்.மனோகரன் 2011-2016 காலகட்டத்தில் திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக இருந்தார். ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டபோது முழுமையாகவும், நேர்மையாகவும், விசுவாசமாகவும் பணியாற்றிய ஒரே காரணத்தால் யாரும் எதிர்பாராத வகையில் திருச்சி ஆர்.மனோகரனுக்கு அரசு கொறடா பதவியை வழங்கி கௌரவித்தார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அமமுக தொடங்கப்பட்ட பிறகு தினகரனுடன் இருந்த மனோகரன், மாவட்ட செயலாளராக இருந்து வந்தார். வெற்றிவேல் மறைவுக்குப் பிறகு அமமுகவில் பொருளாளர் பதவி மனோகரனுக்கு வழங்கப்பட்டது. தினகரனின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்கிய மனோகரன் இன்று எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளது அமமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அங்கீகரிக்கப்பட்ட பின்னர், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைப்பேன், ஒரு சிலரை தவிர அனைவரும் இணைந்து பணியாற்றலாம் என்றார். அதன்படி, அமமுகவின் முக்கிய நிர்வாகிகளை தன் பக்கம் இழுத்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.  

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி திமுகவிற்கு பாடம் புகட்டும் வகையில் அதிமுகவில் மனோகரன் இணைந்ததன் மூலம் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவின் பலம் கூடியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து மனோகரன் பிரிந்து சென்றது அக்கட்சியில் பெரிய இழப்பாக கருதப்படுகிறது.

செய்தி: க.சண்முகவடிவேல்

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment