சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் உயர்வு வழங்க சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. நாளொன்றுக்கு வழங்கப்பட்டு வரும் தினகூலியை ரூ.300-ல் இருந்து 325 ரூபாயாக உயர்த்தி வழங்க சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் இன்று (ஜூலை 2) சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அம்மா உணவக திட்டம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட திட்டமாகும். சென்னையில் மொத்தம் 392 அம்மா உணவகங்களில் 3100 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தினக்கூலியை உயர்த்தி தர கோரி சுமார் 8 ஆண்டுகளாக ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், அண்மையில் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் அம்மா உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், அம்மா உணவகத்தில் பணிபுரியும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு நாளொன்றுக்கு வழங்கப்பட்டு வரும் தினக்கூலியை ரூபாய் 300-இல் இருந்து 325 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று இன்று அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
மேலும் ஏப்ரல், மே மாதத்திற்கான ஊதிய உயர்வை அரியர்ஸ் தொகையாக ஊழியர்களுக்கு விடுவிக்க வேண்டும். இந்த ஊதிய உயர்வு மூலம் சென்னை மாநகராட்சிக்கு ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“