திருநெல்வேலி மாவட்டம், கடையத்தில் ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அமமுகவைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவர் ஒட்டியுள்ள பிரச்சார போஸ்ட்டரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தை பயன்படுத்தியுள்ளார். அதில், தமிழக முதல்வரின் ஆசியுடன், கடையம் ஒன்றியத்தில் 13 வது வார்டில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் சந்திரசேகர் என்று குறிப்பிட்டு கவனத்தைப் பெற்றுள்ளார்.
மேலும், அந்த போஸ்டரில் தன்னை ஆதரித்து பிரஷர் குக்கர் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று சந்திரசேகர் தனது வார்டில் ஒட்டியுள்ள போஸ்டரில் குறிப்பிட்டுள்ளார். அந்த போஸ்டரில் ஸ்டாலின் மற்றும் சந்திரசேகரின் படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. ஆனால், சந்திரசேகர் ஒட்டியுள்ள போஸ்டரில் அமமுகவின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் படமோ அல்லது அ.தி.மு.க தலைவர்கள் படமோ அதில் யாருடைய படமும் இடம்பெறவில்லை.
கடையம் ஒன்றியத்தில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு அமமுக சார்பில் போட்டியிடும் சந்திரசேகர், வாக்கு கேட்டு ஒட்டியுள்ள பிரச்சரா போஸ்டரில் திமுக தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தை பயன்படுத்தியிருப்பது தமிழக அரசியலில் கவனத்தைப் பெற்று விவாதமாகியுள்ளது.
இது குறித்து சந்திரசேகர் ஊடகங்களிடம் கூறுகையில், “தமிழ்நாட்டில் வசிக்கும் அனைவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுவானவர். நான் அமமுக கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், ஸ்டாலினின் படத்தை எனது கவுன்சிலர் அலுவலகத்தில் வைக்க வேண்டும். அவருடைய நிர்வாகத்தின் கீழ் நான் வேலை செய்ய வேண்டும். எனவே, இது தவறு என்று நான் நினைக்கவில்லை. தி.மு.க -வினர் கூட என்னை ஆதரிக்கிறார்கள். ஏனெனில், அவர்களின் வேட்பாளர் ஜெயக்குமார் முன்பு புதிய தமிழகம் கட்சியில் இருந்தபோது ஸ்டாலின் உருவ பொம்மையை எரித்தார்” என்று கூறியுள்ளார்.
சந்திரசேகர் வேட்புமனு பரிசீலனையின்போது, ஜெயக்குமாரின் ஆவணங்களை நிராகரிக்கக் கோரி கடையத்தில் உள்ள தொகுதி மேம்பாட்டு அலுவலகம் முன்பு தர்ணா நடத்தினார். “ஜெயக்குமாரின் பூர்வீக சொத்தின் மதிப்பு மட்டும் கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் ஆகும். அவர் பல்வேறு மாநில மற்றும் மத்திய அரசின் திட்டங்களின் கீழ் மானிய வீடுகள் மற்றும் இலவச பட்டா நிலங்களைப் பெற்றுள்ளார். அவரிடம் போலி வாக்காளர் அடையாள அட்டை உள்ளது. அவரது மனைவிக்கு 2.33 கோடி ரூபாய் சொத்து உள்ளது. ஆனால், அவர் பான் கார்டு வைத்திருக்கவில்லை. வருமான வரி சரியாக செலுத்தவில்லை” என்று சந்திரசேகர் குற்றம் சாட்டினார்.
மேலும், ஜெயக்குமாரின் வேட்புமனுவை ஏற்றுக்கொண்ட தேர்தல் அதிகாரிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என்று அவர் கூறினார். ஆனால், ஜெயக்குமார் சந்திரசேகர் தன்மீது வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். “திமுக வெற்றிபெற நல்ல வாய்ப்பு உள்ளதால், அதிமுக வேட்பாளர் வாக்காளர்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறார். சந்திரசேகரால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை எங்கள் கட்சி தொண்டர்கள் இப்போது அகற்றி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிப்பேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடையம் ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அமமுக வேட்பாளர் சந்திரசேகர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தை பயன்படுத்தியிருப்பது நடைபெறும் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் கவனத்தைப் பெற்றுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”