திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் கொரோனா சிகிச்சை மையத்துக்கு தனது மிகப்பெரிய வீட்டை அளித்த அமமுக நகரச் செயலாளரும் தொழிலதிபருமான தென்னரசுவுக்கு பலரும் பாராட்டுதல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் இந்தியாவுக்கும் மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.
தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் 74 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்தார். அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீட்டுத் தனிமைப்படுத்தலில் உள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் மக்கள் ஊரடங்கை மீறி வெளியே சென்றுவந்தால் மிகப் பெரிய அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கருத்தப்படுகிறது. அதனால், சென்னை மாநகராட்சி அண்மையில், பயன்படுத்தப்படாத வீடுகள், விடுதிகளை ஆகியவற்றை தற்காலிகமாக அளிக்க முன்வரவேண்டும் என கேட்டுக்கொண்டது. அதே போல, திண்டுக்கல், மதுரை போன்ற மாவட்டங்களிலும் கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க இடங்களைப் பார்த்துவருவதாக தகவல் வெளியானது. இது போன்ற மற்ற மாவட்டங்களிலும் தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கொரோனா சிகிச்சைக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கை அளிப்பதாகக் கூறினார். இதையடுத்து, திருச்சியில் உள்ள திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கொரோனா சிகிச்சை மையத்துக்கு திருச்சி சுகாதார அலுவலரிடம் ஒப்படைத்தார்.
இதனிடையே, திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார் பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபரும் அமமுக நகரச் செயலாளருமான தென்னரசு, தன்னுடைய மிகப்பெரிய வீட்டை திருப்பத்தூர் மாவட்ட சுகாதார அலுவலரிடம், கொரோணா சிகிச்சைக்கு பயன்படுத்திக்கொள்ள அளித்துள்ளார்.
கொரோனா என்றால் பலரும் அஞ்சி நடுங்கிவரும் நிலையில், தென்னரசு தன்னுடைய 8000 சதுர அடி பரப்பு கொண்ட மிகப்பெரிய வீட்டை கொரோனா சிகிச்சைக்காக அளிக்க முன்வந்துள்ளார்.
இது குறித்து ஐ.இ. தமிழில் இருந்து தென்னரசுவைத் தொடர்பு கொண்டபோது, தென்னரசு கூறியதாவது, “ஜோலார்பேட்டையில் பார்த்தசாரதி தெருவில் என்னுடைய வீடு இருக்கிறது. 8000 சதுர அடி பரப்பு கொண்ட வீடு அது. அதில் ஒரு 50 படுக்கைகள் அமைக்கலாம். அந்த வீட்டில் எல்லா வசதிகளும் உள்ளது. கொரோனா வைரஸ் பிரச்னை நிறைய இருப்பதால், கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க எனது வீட்டை தற்காலிகமாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் திலிபன் அவர்களிடம் கூறினேன். அவர் தேவையானால் நிச்சயமாக எடுத்துக்கொள்கிறோம் என்று கூறினார். அதன் பிறகு அந்த வீட்டை, அவர்களிடம் ஒப்படைத்துள்ளேன். ஆனால், அவர்கள் இன்னும் பயன்படுத்தவில்லை. தேவையென்றால் பயன்படுத்துதாக கூறியுள்ளார்கள்.” என்று கூறினார்.
கொரோனாவால் ஏற்பட்டுள்ள நெருக்கடி காலத்தில் மனிதநேயத்துடன் தனது வீட்டை கொரோனா சிகிச்சைக்காக தற்காலிகமாக அளித்துள்ள தென்னரசுவை பலரும் பாராட்டி வருகின்றனர்.
தென்னரசு தனது வீட்டை கொரோனா சிகிச்சைக்கா அளித்தது மட்டுமில்லாமல் சத்தமில்லாமல் நிறைய மனிதநேயமிக்க நல்ல செயல்களையும் செய்து வருகிறார்.
பால் நிறுவனம் வைத்துள்ள தென்னரசு, அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் இலவசமாக பால் வழங்கி வருகிறார். அமமுகவில் நகரச் செயலாளராக இருக்கும் தென்னரசுவுக்கு அமைச்சர் கே.சி.வீரமணி தாய்மாமன் ஆவார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.