பிரதமரை சந்திப்பதற்கு ஓ.பன்னீர்செல்வம் அனுமதி கேட்டு கடிதம் எழுதியது குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை என அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் சிவகங்கையில் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் கூறியதாவது;
நாட்டின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் தமிழகத்தில் மோடியின் ஆட்சி வரவேண்டும். எங்கள் கூட்டணி எம்.ஜி.ஆர் ஆட்சியைப் போல் நல்லாட்சி தரும்.
ஓ.பன்னீர்செல்வம் பிரதமரை சந்திப்பதற்கு அனுமதி கேட்டு கடிதம் எழுதியது குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. தி.மு.க.,வை எதிர்க்கும் கட்சிகள் ஒன்றிணைந்து தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும் என்ற அமித்ஷாவின் நல்லெண்ணத்தை வரவேற்கின்றேன்.
அரசியலில் கூட்டணி குறித்து ஆறு நிமிடத்தில் கூட முடிவெடுக்க முடியும். கூட்டணிகளின் முடிவு 2026 ஜனவரி இறுதியில் தான் தெரிய வரும்.
அம்மாவின் உண்மையான தொண்டர்களை ஒன்றிணைப்பதில் அமித்ஷா தீவிரம் காட்டி வருகிறார். அதனால், அமிதஷாவின் முயற்சிக்கு பங்கம் வருவது போல் நான் எந்த கருத்தையும் சொல்ல மாட்டேன்.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளது, சிவகங்கை அஜித்குமார் கொலை அதற்கு ஒரு உதாரணம். வேலையில்லா திண்டாட்டத்தால் இளைஞர்கள் கூலிப்படையாக மாறி வருகிறார்கள். கொலை கொள்ளை கஞ்சா போன்றவைகளை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.