அமமுகவில் தொடர்ந்து பலரும் விலகி வரும் நிலையில், புதிய நிர்வாகிகள் பட்டியலை டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பி.எஸ். மெரீனா சமாதியில் தியானம் செய்ய, சசிகலா – ஓ.பி.எஸ்.எஸ் மோதல் பகிரங்கமாக வெடித்தது. பிறகு, முதலமைச்சரான எடப்பாடியார், லைம் லைட்டுக்கு வர, ஓ.பி.எஸ்.ஸின் நிலைமை மேலும் சிக்கலானது. இதற்கிடையில், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்ல, இ.பி.எஸ்.ஸுடன் இணைந்தார் ஓ.பி.எஸ்.
அதன்பிறகு அதிமுக உட்கட்சி மோதல் இ.பி.எஸ். – தினகரன் மோதலாக உருவெடுத்தது. டிடிவி தினகரன் தலைமையிலான அணி தங்களை அதிமுக அணி என்று கூறி வந்தது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நேரத்தில் அதிமுக ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது.
ஆனால், குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட அம்மா அணி வேட்பாளர் டிடிவி தினகரன் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார். பின்னர் தேர்தல் நடைமுறைக்காக அமமுக (அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்) என பெயர் வைத்தார். அதன் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன், கொள்கை பரப்புச் செயலாளராக தங்க தமிழ்ச்செல்வன், அமைப்புச் செயலாளர்களாக செந்தமிழன், பழனியப்பன் உள்ளிட்டோர் இருந்தனர்.
ஆனால், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அமமுக ஒரு இடம்கூட பெற முடியாமல் தோல்வியைத் தழுவினாலும் ஏறக்குறைய 5 சதவிகித வாக்குகளைப் பெற்றது. ஆனாலும் சட்டமன்ற இடைத் தேர்தலில் 9 எம்.எல்.ஏக்களை வென்றதன் மூலம், அதிமுக தனது ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. அமமுகவின் மிக முக்கிய நிர்வாகிகளே தோல்வி அடைந்தனர். இதனால் அமமுகவுக்குள் சலசலப்பு ஏற்பட்டது. ஏற்கனவே செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் வெளியேறிய நிலையில் தேர்தலுக்குப் பிறகு பாப்புலர் முத்தையா உள்ளிட்ட மாவட்டச் செயலாளர்கள் அதிமுகவில் இணைந்தனர்.
தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்தார், இசக்கி சுப்பையாவும் வெளியேறினார். இதையடுத்து அமமுகவில் புதிய நிர்வாகிகளை ஏற்கெனவே அறிவிப்பேன் என அறிவித்திருந்த டிடிவி தினகரன் இன்று நிர்வாகிகள் பட்டியலை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமைக் கழக நிர்வாகிகளாக கீழ்கண்டவர்கள் கீழ்காணும் பொறுப்புகளில் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
துணைப் பொதுச்செயலாளர் :
1. P.பழனியப்பன் (முன்னாள் அமைச்சர், தருமபுரி)
2. M.ரெங்கசாமி (தஞ்சாவூர்)
பொருளாளர் : வெற்றிவேல் (சென்னை)
தலைமை நிலையச் செயலாளர்: R.மனோகரன் முன்னாள் அரசு கொறடா (திருச்சி மாவட்டம்)
கொள்கை பரப்புச்செயலாளர் : C.R.சரஸ்வதி, முன்னாள் சமூக நல வாரியத் தலைவர் (சென்னை).
என்று டிடிவி அறிவித்துள்ளார்.