மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள அ.ம.மு.க சார்பில் போட்டியிடும் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தேனி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தல் திருவிழா தொடங்கி கலைகட்டி வருகிறது. அரசியல் கட்சிகள் கூட்டணியையும் தொகுதிப் பங்கீட்டையும் இறுதி வேட்பாளர்களை அறிவித்து வருகிறார்கள்.
மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ம.க, த.மா.கா, அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகளை இணைத்து தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து வேட்பாளர்களை அறிவித்தது.
தமிழ்நாட்டில் பா.ஜ.க 20 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது. அன்புமணி ராமதாஸ் தலைமையிலன பா.ம.க 10 தொகுதிகளிலும் ஜி.கே. வாசன் தலைமையிலான த.மா.கா 3 தொகுதிகளிலும், டி.டி.வி தினகரன் தலைமையிலான அ.ம.மு.க 2 தொகுதிகளிலும் ஏ.சி. சண்முகம் தலைமையிலான புதிய நீதிக் கட்சி, ஜான் பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயகக் கட்சி தலா 1 தொகுதியில் போட்டியிடுகின்றன.
பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள அ.ம.மு.க-வுக்கு தேனி மற்றும் திருச்சி தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க, த.மா.கா உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.
இந்நிலையில், பா.ஜ.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் அ.ம.மு.க-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேனி, திருச்சி ஆகிய 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் வெளியிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தேனி தொகுதியில் போட்டியிடுகிறார். திருச்சி தொகுதியில் அக்கட்சியைச் சேர்ந்த செந்தில்நாதன் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன், “தேர்தலில் போட்டியிடும் எண்ணமே இல்லாமல்தான் இருந்தேஎன். ஓ.பி.எஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் இருவரும், நான் இங்குதான் போட்டியிட வேண்டும் என அழைத்தனர்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “என்னை எதிர்த்து போட்டியிடும் தங்கதமிழ்ச்செல்வன் எனது முன்னாள் நண்பர்; யாரையும் நான் போட்டியாக கருதவில்லை. நான் யாருக்கும் குருவும் இல்லை, எனக்கு யாரும் சிஷ்யனும் இல்லை.” என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“