Advertisment

காரில் இருந்து இறங்கி வந்து நலம் விசாரித்த ஸ்டாலின்… சத்தியமா எதிர்பார்க்கல - அ.ம.மு.க சி.ஆர். சரஸ்வதி நெகிழ்ச்சி

அ.ம.மு.க கொள்கை பரப்புச் செயலாளர் சி.ஆர். சரஸ்வதி சாலையில் நடந்து செல்லும்போது வணக்கம் கூறியதையடுத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காரில் இருந்து இறங்கி வந்து நலம் விசாரித்தால், சி.ஆர். சரஸ்வதி நன்றி கூறி நெகிழ்ச்சி தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
AMMK spokesperson CR Saraswathy meets CM MK Stalin at Road, CR Saraswathy meets CM MK Stalin, CR Saraswathy, CM MK Stalin, AMMK, காரில் இருந்து இறங்கி வந்து நலம் விசாரித்த ஸ்டாலின், அ.ம.மு.க சி.ஆர். சரஸ்வதி நெகிழ்ச்சி, AMMK spokesperson CR Saraswathy, MK Stalin

அ.ம.மு.க கொள்கை பரப்புச் செயலாளர் சி.ஆர். சரஸ்வதி சாலையில் நடந்து செல்வதைப் பார்த்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காரில் இருந்து இறங்கி வந்து நலம் விசாரித்தார். இதை சற்றும் எதிர்பாராத சி.ஆர். சரஸ்வதி, முதல்வருக்கு நன்றி கூறி நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், சி.ஆர். சரஸ்வதி முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசியது அ.ம.மு.க நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவில் 1979-ம் ஆண்டு நடிகையாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய சி. ஆர். சரஸ்வதி சுவர் இல்லாத சித்திரங்கள், எங்க சின்ன ராசா, அமைதிப்படை, கர்ணா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

ஜெயலலிதாவால் ஈர்க்கப்பட்ட சி.ஆர். சரஸ்வதி 1999-ம் ஆண்டு அ.தி.மு.க-வில் இணைந்தார். ஜெயலலிதாவால் 2014-ம் ஆண்டில், அ.தி.மு.க செய்தித் தொடர்பாளராகவும் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, அ.தி.மு.க-வில் இருந்து டி.டி.வி தினகரன் அணியில் இணைந்தார். சி.ஆர். சரஸ்வதி தற்போது அ.ம.மு.கவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் உள்ளார்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகளை பார்வையிட்டார். அந்த வகையில், அசோக்நகர் பகுதியில் மழை நீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு பணிகளை ஆய்வு செய்தார்.

அ.ம.மு.க கொள்கை பரப்புச் செயலாளர் சி.ஆர். சரஸ்வதி சாலையில் நடந்து செல்லும்போது, அவ்வழியே காரில் சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு சி.ஆர். சரஸ்வதி வணக்கம் கூறினார். இதையடுத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காரில் இருந்து இறங்கி வந்து சி.ஆர். சரஸ்வதிக்கு பதில் வணக்கம் கூறி நலம் விசாரித்தார். பின்னர், ஸ்டாலின் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.

எதிர்கட்சியான அ.ம.மு.க கொள்கை பரப்புச் செயலாளார் சி.ஆர். சரஸ்வரதி முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசியது அ.ம.மு.க நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காரில் இருந்து இறங்கி வந்து நலம் விசாரித்தது குறித்து அ.ம.மு.க கொள்கை பரப்புச் செயலாளர் சி.ஆர். சரஸ்வதி ஊடகங்களிடம் கூறியதாவது: “நான் அம்மாவுடன் 15 ஆண்டுகள் அரசியலில் இருந்திருக்கிறேன். இப்போது அ.ம.மு.க-வில் இருக்கிறேன். தெரியும் இல்லையா… ஆனால், எனக்கு முதலமைச்சர் ஸ்டாலினை நேரடியாகவோ சந்திச்சதோ பேசியதோ இல்லை. ஆனால், போகும்போது வரும்போது தூர நின்று பார்ப்பேன். ஆனால், நான் இந்த அப்பார்ட்மெண்ட்டில்தான் இருக்கிறேன். நான் இன்றைக்கு தீரன் சின்னமலை சிலைக்கு மாலைப் போட போயிருந்தேன். டி.டி.வி தினகரன் தீரன் சின்னமலை சிலைக்கு மாலைப் போட வந்திருந்தார். நிகழ்ச்சி முடித்துவிட்டு இப்போதுதான் வந்து இங்கே இறங்கினேன். இறங்கும்போது, போலீஸ் எல்லாம் நிறைய இருந்தார்கள். முதலமைச்சர் வருகிறார் என்று கூறினார்கள். முதலமைச்சர் இங்கே வேலை நடப்பதைப் பார்த்துவிட்டு போகும்போது, எங்களுடைய வீட்டைத் தாண்டிப் போகிறார்.

நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தாலும் எல்லோருக்கும் அவர்தானே முதலமைச்சர். வணக்கம் சொல்ல வேண்டியது என்னுடைய கடமை. நான் வணக்கம் சொல்லிவிட்டு இங்கேதான் நின்றுவிட்டேன். அந்த வகையில், அவருக்கு வணக்கம் தெரிவித்தேன்.

முதலமைச்சர் நிகழ்சியை எல்லாம் முடித்துவிட்டு அவருடைய கார் திரும்பி வந்தது. நான் சத்தியமா எதிர்பார்க்கவில்லை. அவர் இறங்கி வந்து, எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா? இங்கதான் இருக்கீங்களா? என்று கேட்டார். நான் ஆமாம் சார், இங்கதான் இருக்கிறேன் என்று கூறினேன். இங்கதான் எங்க வீடு என்று கூறினேன்.

ஏதாவது பிரச்னை இருக்கா என்று கேட்டார், மழை பெய்தால் தண்ணீர் நிற்கிறது என்று கூறினேன். அதனால்தான், நானே நேரில் வந்து பார்க்கிறேன் என்று கூறினார். அதற்கு மேல், முதலமைச்சரை சாலையில் வைத்து பேசுவது நல்லதல்ல. ரொம்ப நன்றி சார் என்று கூறினேன்” என்று சி.ஆர். சரஸ்வதி நெகிழ்ச்சியாகக் கூறினார்.

இந்த பகுதியில் சாலை தாழ்வாக இருப்பதால் மழை பெய்தால் தண்ணீர் தேங்கி உள்ளே வந்துவிடும். முதலமைச்சர் நேரில் வந்து பார்வையிட்டு, இறங்கி வந்து சரி செய்து சீக்கிரம் முடித்துக் கொடுத்து விடுகிறேன் என்று சொல்லும்போது, அவர் மக்களுடைய பிரச்னைகளைக் காதுகொடுத்து கேட்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். தனிப்பட்ட அரசியலுக்கு அப்பால், காரில் இருந்து இறங்கி வந்து ஒரு பிரச்னையைக் கேட்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.” என்று சி.ஆர். சரஸ்வதி கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Mk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment