தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டமன்ற தொகுதிகளில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு மக்களவை தேர்தலுடன் இணைந்து தேர்தல் நடத்தப்பட்டது. மீதமுள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாக அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்னசபாபதி, விருத்தாச்சலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு ஆகியோரிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதிமுக கொறடா ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையடுத்து சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று பேரவை செயலாளரிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, 3 எம்.எல்.ஏக்களுக்கு எதிராக சபாநாயகர் அளித்த நோட்டீசுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் படிக்க - அமமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள் விவகாரம் : சபாநாயகரின் நோட்டீஸுக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்
இந்த சூழலில் தேனியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமமுகவைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன, நம்பிக்கை வாக்கெடுப்பு வரணும். அதைக் கோருவதற்கு 34 எம்.எல்.ஏக்கள் வேண்டும். இதனால் திமுக எங்களுக்கு ஆதரவு கொடுத்தாக வேண்டும். இல்லையென்றால் திமுக எங்களைக் கண்டு பயப்படுகிறது என்று அர்த்தம். நிச்சயமாக திமுக ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை. இப்போதைய ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப தான் வாய்ப்பு. அதிமுக ஆட்சியை கலைக்க திமுக ஆதரவளிக்க வேண்டும். ஆனால், திமுக ஆட்சியமைக்க அமமுக ஆதரவு தராது. பொதுத் தேர்தலை சந்தித்து அமமுக பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று அம்மாவுடைய ஆட்சியை அமைக்கும்" என்றார்.