அமமுக கூட்டணியில் இணைந்த தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்துக்கு அமமுக சார்பில் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிரச்சார வாகனம் வழங்கப்பட்டுள்ளது. பிரச்சார வாகனத்தின் புகைப்படம் வெளியானதையடுத்து, கூட்டணின்னா இப்படி இருக்கணும் என்று சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முதல் அதிமுக கூட்டணியில் இருந்து வந்த விஜயகாந்த் தலைமையிலான தேமுதிகவுக்கு இந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 20க்கும் குறைவான இடங்களை முன்வந்ததால் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியது.
2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் அளிக்கப்பட்டது. ஆனால், இந்த தேர்தலில் தேமுதிகவுக்கு 20க்கும் குறைவான இடங்களி அளிக்க முன்வந்ததற்கு காரணம், தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் உடல்நலப் பிரச்னையால் நீண்ட பிரச்சார உரை நிகழ்த்த முடியாது. மேலும், தேமுதிகவின் பலம் குறைந்துள்ளது என்று காரணமாக கூறப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனாலும், விஜயகாந்த்தின் மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதாவும் அவருடைய மகன் விஜய பிரபாகரன் இருவரும் உணர்ச்சி மிக்க உரைகளால் தொண்டர்களை தக்க வைத்து வருகின்றன.
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அணியில் இருந்து வெளியேறிய தேமுதிக டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக கூட்டணியில் இணைந்தது. அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று (மார்ச் 17) சென்னையில் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த்தை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துப் பேசினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “இந்த தேர்தலில், திமுக மற்றும் அதிமுகவை தோற்கடிப்பதே நோக்கம்” என்று கூறினார்.
இந்த நிலையில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக அமமுக சார்பில் பிரச்சார வாகனம் வழங்கப்பட்டுள்ளது. விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடும் பிரேமலதா விஜயகாந்த் இந்த வாகனம் மூலம் பிரச்சாரம் செய்ய உள்ளார். மேலும், அமமுக போட்டியிடும் இடங்களிலும் சென்று பிரச்சாரம் செய்ய உள்ளார்.
அமமுக சார்பில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்துக்கு அளிக்கப்பட்டுள்ள பிரச்சார வாகனத்தின் புகைப்படம் வீடியோ ஊடகங்களிலும் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. இது குறித்து நெட்டிசன்கள் கூட்டணின்னா இப்படி இருக்கணும் என்று கம்மெண்ட் செய்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.