சென்னை எண்ணூர் அருகே பெரிய குப்பம் பகுதியில் உள்ள கோரமண்டல் தொழிற்சாலையில் இருந்து திடீரென நேற்று நள்ளிரவில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. வாயு கசிவு ஏற்பட்டதையடுத்து அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத் திணறல், மயக்கம் ஏற்பட்டது.
30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். நள்ளிரவில் வாயு கசிவு ஏற்பட்டதால் பெரிய குப்பம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பதற்றமடைந்து தங்களது வீடுகளை விட்டு வெளியேறினர். ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் மூலம் கூட்டமாக அப்பகுதியை விட்டு வெளியேறினர்.
இந்நிலையில், சம்பவம் குறித்து தகவல் அறிந்து உடனடியாக களத்தில் இறங்கிய காவல்துறை சம்பவம்
குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், எண்ணூர் தனியார் தொழிற்சாலையில் இருந்து, கடலுக்கடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நள்ளிரவில் அமோனியம் வாயு கசிவு ஏற்பட்டதாக கூறினர். அமோனியம் வாயு கடல் நீரில் கலந்து, காற்றில் கலந்ததால் பாதிப்பு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
தொடர்ந்து, தொழிற்சாலை அதிகாரிகளிடம் பேசியதாகவும், பாதிப்பு சரி செய்யப்படுவதாகவும், மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் எனத் தெரிவித்ததாகவும் கூறினர். மக்கள் தங்களது வீடுகளுக்குத் திரும்பவும் போலீசார் அறிவுறுத்தினர்.
இந்நிலையில், மாசு கட்டுப்பாடு வாரியம் அமோனியா வாயு கசிவை உறுதி செய்து அறிக்கை வெளியிட்டது. அதில், ஞஎண்ணூர் கடல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கோரமண்டல் தொழிற்சாலையின் திரவ அமோனியம் எடுத்து வரும் குழாயில் இருந்து அமோனியா வாயு கசிந்ததை மாசு கட்டுப்பாடு வாரியம் உறுதி செய்தது. ஆலை வாசலில் காற்றில் 400 microgram/ m3ஆக இருக்க வேண்டிய அமோனியா 2090 microgram/ m3 ஆகவும், கடலில் அமோனியா 5 mg/L ஆக இருக்க வேண்டிய 49 mg/L இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாடு கடல் சார் வாரியத்தில் ஒப்புதலோடு மட்டுமே குழாயை இயக்க வேண்டும்" என உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து, தமிழக வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாஹூ கூறுகையில், ண்ணூரில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காற்றின் தரம் மற்றும் கடல் நீரின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அனுமதிக்கப்பட்ட அளவைவிட காற்றிலும், கடல் நீரிலும் அமோனியாவின் கலப்பு அதிகரித்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது எனக் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“