மணலியில் உரத்தொழிற்சாலையில் இருந்து அம்மோனியா வாயுக் கசிவு; மூச்சுத் திணறலால் மக்கள் அவதி

சென்னை மணலியில் உள்ள மெட்ராஸ் ஃபெர்டைலைசர்ஸ் லிமிடெட் (எம்.எஃப்.எல்) உரத்தொழிற்சாலையில் இருந்து வியாழக்கிழமை இரவு அம்மோனியா வாயு கசிந்ததால், அருகிலுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்...

சென்னை மணலியில் உள்ள மெட்ராஸ் ஃபெர்டைலைசர்ஸ் லிமிடெட் (எம்.எஃப்.எல்) உரத்தொழிற்சாலையில் இருந்து வியாழக்கிழமை இரவு அம்மோனியா வாயு கசிந்ததால், அருகிலுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

ஆந்திரப் பிரதேசம், விசாகப்பட்டினத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் இருந்து ஸ்டைரிஸ் வாயு கசிந்ததால், 13 பேர் உயிரிழந்தனர். இந்த கோர சம்பவம் நடந்து ஒருவாரம் ஆன நிலையில், சென்னை, மணலியில் மெட்ராஸ் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் உரத் தொழிற்சாலையில் இருந்து வியாழக்கிழமை இரவு அம்மோனியா வாயுக் கசிவு ஏற்பட்டு அச்சத்தை ஏற்படுத்திஉள்ளது. அம்மோனியா வாயு கசிவு குறித்து அதிகாரிகள் கூறுகையில், இது லேசான கசிவுதான் என்று தெரிவித்தனர்.

மணலியில் அம்மோனியா வாய்க் கசிவு ஏற்பட்டதை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

சென்னை மணலி பகுதியில் உரங்கள் தயாரிக்கும் மெட்ராஸ் ஃபெர்டைலைசர்ஸ் லிமிடெட் (எம்.எஃப்.எல்) தொழிற்சாலை உள்ளது. இது மத்திய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். யூரியா உரம் தயாரிப்பதற்கு முக்கிய மூலப்பொருளாக அம்மோனியா பயன்படுத்தப்படுகிறது. பொது முடக்கத்தால் திட்டமிடப்படாமல் வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால், எம்.எஃப்.எல்.-ல் யூரியா உற்பத்தி செய்யும் அலகில், வால்வுகளில் இருந்து அழுத்தம் காரணமாக வாயுக் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இந்த அம்மோனியா வாயுக் கசிவை அதிகாரிகள் லேசான கசிவு என்று கூறுகின்றனர்.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) அல்லது உரத் தொழிற்சாலைக்கு அருகில் அமைந்துள்ள டி.என்.பி.சி.பி.-யின் சுற்றுப்புற காற்று கண்காணிப்பு நிலையங்களும் அசாதாரண அளவில் அம்மோனியா வாயுவை கண்டறியவில்லை என்று ஊடகங்களிடம் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், நிலைகள் அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்குள் இருப்பதாக தரவு காட்டியது என்றும் கூறினர்.

ஆனால், மணலியில் உரத்தொழிற்சாலை உள்ள பகுதியைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் அம்மோனியா வாயுக் கடுமையாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர். வியாழக்கிழமை இரவு 8.30 மணி அளவில் மணலி குடியிருப்பு பகுதியில் உள்ள மக்கள் திடீரென அம்மோனியா வாயுக் கசிவை உணர்ந்துள்ளனர். இந்த அம்மோனியா வாயுக் கசிவு அடுத்த 30-40 நிமிடங்களில் கடுமையான கண் எரிச்சல், குமட்டல் மற்றும் மூச்சுத் திணறலை ஏற்படுத்தியது என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அம்மோனியா வாயுக் கசிவு மணலி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு புதிதல்ல என்றாலும், இந்த முறை அம்மோனியா வாயுக் கசிவு பெரிய அளவில் இருந்தது கூறுகிறார்கள். அதனால், பெரும்பாலோர் முகக் கவசம் அணிந்து வீட்டிற்குள்ளேயே இருந்தனர்.

அம்மோனியா வாயுக்கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை தொழிற்சாலை முற்றிலுமாக மூடப்பட்டதாக தெரியவந்துள்ளது.

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக எம்.எஃப்.எல்லில் இருந்து திடீரென தானாக அம்மோனியா வாயு கசிவு ஏற்படுவதை எதிர்த்து இப்பகுதி மக்கள் போராடி வருவதாக மாத்தூர் மக்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக புகார் அளித்தாலும் எந்த பலனும் இல்லை என்று கூறுகின்றனர். மேலும், இதனுடன் தாங்கள் வாழப் பழகிக்கொண்டதாக கூறும் மாத்தூர் பகுதி மக்கள் வியாழக்கிழமை இரவும் கசிவைக் கண்டு அச்சமடைந்ததாகவும் கூறுகின்றனர்.

அம்மோனியா வாய்க்கசிவு குறித்து எம்.எஃப்.எல் ஊடகங்களின் கேள்விக்கு எந்த விளக்கமும் அளிக்காத நிலையில், எம்.எஃப்.எல் தலைமை மேலாளர் ஆனந்த விஜயன், அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கவில்லை என்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். ஆனால், தனக்கு ஊடகங்களின் எந்த கேள்விக்கும் பதிலளிக்கும் அதிகாரம் இல்லை என்று பதிலளிக்க மறுத்துள்ளார்.

மெட்ராஸ் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடேட் உரத்தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் அம்மோனியா வாயுவால் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் மணலி பகுதி மக்களுக்கு, விசாகப்பட்டினத்தில் ஏற்பட்ட கோரம் சம்பவம் போல ஏற்படாமல் தடுத்து அவர்களுக்கு இனிமேலாவது தீர்வு கிடைக்குமா என்ற என்பதே அப்பகுதி மக்களின் கேள்வியாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close