அமுல் நிறுவனம் (ஆனந்த் மில்க் யூனியன் லிமிடெட்), படிப்படியாக தமிழ்நாட்டின் பால் சந்தையில் நுழைய திட்டமிட்டுள்ளது. இதனிடையே உள்ளூர் விவசாயிகளுக்கு கூட்டுறவு மாதிரி வழங்கப்படுகிறது என்று திருச்சியில் அமுல் டெய்ரியின் நிர்வாக இயக்குநர் அமித் வியாஸ் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் உள்ள சித்தூரில் பால் பதப்படுத்தும் ஆலை அமைக்கப்பட்டு பெங்களூருவுக்கு விநியோகம் செய்யப்படுவதாக செய்தியாளர்களிடம் அவர் கூறினார். "நாங்கள் சென்னையில் தயிர் விற்பனையைத் தொடங்கினோம். இதைத் தொடர்ந்து, பால் சந்தையில் நுழைய இருக்கிறோம். உள்ளூர் விவசாயிகளுக்கு கூட்டுறவு மாதிரியை வழங்குவோம். வேலூர் அருகே சுமார் 50,000 லிட்டர் பாலை, நியாய விலையில் கொள்முதல் செய்து வருகிறோம். கால்நடை பராமரிப்பு, பால் உற்பத்தியை மேம்படுத்துதல் போன்ற சேவைகளை வழங்குவதன் மூலம் விவசாயிகளுக்கு ஆதரவளித்து அவர்களின் வருமானத்தை மேம்படுத்துவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்" என்று அவர் கூறினார்.
ஆர்கானிக் வகையான வேளாண்மையில் அமுல் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. மேலும், மாநிலத்தில் தனது சொந்த இயற்கை உரங்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது கடந்த இரண்டு ஆண்டுகளாக விற்கப்படுகிறது. அடுத்த 10 நாட்களுக்குள், நாமக்கல்லில் உள்ள தனது தொழிற்சாலையில் உரம் உற்பத்தியை அமுல் நிறுவனம் தொடங்க இருப்பதாக வியாஸ் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திராவை குறிவைத்து தென்னிந்தியா முழுவதும் தயாரிப்புகளை அனுப்ப நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அமுல், அதன் கரிம உரங்களை தூள், துகள்கள் மற்றும் திரவம் உட்பட பல வடிவங்களில் விநியோகித்து வருகிறது.
கூடுதலாக, அமுல் ஆர்கானிக் விவசாய விளைபொருட்களை தமிழ்நாட்டில் இருந்து கொள்முதல் செய்து, நம்பகமான அமுல் பிராண்டின் கீழ் சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும், இப்பகுதியில் இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும் என்றும் வியாஸ் கூறியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் விரைவில் அமுல் பால் கிடைக்கும், மெதுவாகவும், வலுவாகவும் தமிழகத்தில் கால் பதிப்போம் என்றார்.
இதுபோன்ற கண்காட்சியை நான் இங்கு தான் முதல் முறையாக பார்க்கிறேன். அமுல் நிறுவனம் 1946 இல் இருந்து விவசாயிகளின் கூட்டுறவு முயற்சியில் நடத்தப்பட்டு வருகிறது. அமுல் நிறுவனம் கடந்த 4 வருடங்களாக ஆர்கானிக் உரம் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.
வரும் காலங்களில் தமிழகம் மற்றும் தென்னிந்தியா முழுவதும் எங்களது விவசாய உரம் மற்றும் அதன் சார்ந்த பொருட்களை விற்பனை செய்ய உள்ளோம். தற்போது குஜராத் மாநிலத்தில் மட்டுமே விற்பனை செய்து வருகிறோம், விரைவில் எங்களது விற்பனையை விரிவுபடுத்திட உள்ளோம்.
தமிழகத்தில் அமுல் பால் மற்றும் பால் பொருட்களை அறிமுகப்படுத்தும் எண்ணம் உள்ளதா எனக் கேட்டபோது, அமுல் பால் பொருட்கள் தமிழகத்தில் ஏற்கனவே உள்ளது என்றும் ஐஸ்கிரீம், பட்டர், சீஸ், சாக்லெட் போன்றவை நாடு முழுவதும் உள்ளது.
தற்போது அமெரிக்காவில் எங்களது கிளை நிறுவனத்தை தொடங்கியுள்ளோம், விரைவில் ஸ்பெயின் நாட்டிலும் எங்களது பிராண்ட் அமுல் பெயரில் பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்றார்.
தமிழகத்தில் அமுல்பால் வழங்குவதை பொறுத்தவரை நாங்கள் ஆந்திர மாநிலம் சித்தூரில் புதிதாக ஒரு கிளை நிறுவனம் தொடங்கியுள்ளோம். சித்தூரில் இருந்து பெங்களூருக்கு பால் சப்ளை செய்யப்படும். தற்போது சென்னையில் அமுல் தயிர் கிடைக்கின்றது. மெதுவாகவும் , வலுவாகவும் நாங்கள் தமிழகத்தில் கால் பதிப்போம் என்றார்.
அமுல் நிறுவனம் கூட்டுறவு நிறுவனம் விவசாயிகளிடமிருந்து எவ்வளவு பணத்தை பெறுகிறோமோ அது திரும்ப அவர்களுக்கு கிடைக்கும் வகையிலேயே எங்கள் நிறுவனம் செயல்படுகிறது என்றார். இந்த நிகழ்வில் கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் பாலா, சதீஷ், ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
க.சண்முகவடிவேல்