நிலவில் விக்ரம் லேண்டரை ஏன் எழுப்ப முடியவில்லை என்பது குறித்து இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் விளக்கம் அளித்துள்ளார்.
விண்வெளித்துறையில் சாதனைப் படைத்த தமிழ்நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்தப் பாராட்டு விழாவில் இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் கலந்துகொண்டார்.
அப்போது, நிலவின் தென் துருவத்திற்கு அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகியவை சிறப்பாக செயல்பட்டன.
எதற்காகாக விண்கலம் அனுப்பப்பட்டதோ அந்த மிஷன் வெற்றிகரமாக நிறைவேறியது. விண்கலனில் உள்ள கருவிகளும் சிறப்பாக செயல்பட்டன” என்றார்.
தொடர்ந்து, “இது 1 நிலவு நாள் மட்டுமே தாங்கும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டிருந்தது. நம்மிடம் அணு பேட்டரி இல்லாத காரணத்தால் இரண்டாவது நிலவு நாளில் லேண்டரையும், ரோவரையும் எழுப்ப முடியவில்லை” எனக் கூறினார்.
பின்னர் மத்திய அரசின் மூத்த விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன், “விண்வெளி பயணங்களுக்கு 'ஐசோடோப்பு தெர்மோஎலக்ட்ரிக் ஜெனரேட்டர் எனப்படும் அணு பேட்டரி அவசியமாக இருக்கிறது” என்றார்.
சந்திரனில் இரவு நெருங்கி வருவதால், சந்திரயான்-3 திட்டத்திற்கு புத்துயிர் அளிக்கும் நம்பிக்கை மங்கி வருகிறது. விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் அடங்கிய இந்த விண்கலம் செப்டம்பர் 2ம் தேதி முதல் தூக்க நிலையில் உள்ளது.
இந்த நிலையில், ஷிவ் சக்தி பாயிண்டில் சூரிய ஒளி திரும்பியதிலிருந்து லேண்டர்-ரோவர் இரட்டையருடன் இணைக்க இஸ்ரோ முயன்றது, ஆனால் முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இருப்பினும், செப்டம்பர் 30 ஆம் தேதி சந்திர இரவு தொடங்க உள்ள நிலையில், விண்கலத்துடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன.
சந்திர இரவு, சுமார் 14 நாள்கள் நீடிக்கும். அக்காலக்கட்டத்தில் கடுமையான குளிர் மற்றும் முழுமையான இருளால் சூழ்ந்து இருக்கும். இந்தக் காலகட்டத்தில், சந்திர மேற்பரப்பில் வெப்பநிலை சுமார் மைனஸ் 180 டிகிரி செல்சியஸ் வரை சரிந்து காணப்படும். ஆகையால், எந்தத் தொழில்நுட்பமும் செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“