திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் தலையங்கம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில், “ஏதோ நேர்மையின் சிகரத்தைப் போலக் காட்டிக் கொண்டிருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, ஊழல் அதிமுகவைக் காப்பாற்றி வருவதை சட்ட அமைச்சர் ரகுபதி அம்பலப்படுத்தி இருக்கிறார்.
ஊழல் வழக்குகளில் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கிட இசைவு ஆணைக்காக அனுப்பப்பட்ட கோப்புகள் நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதையும், ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளதையும் குறிப்பிட்டு, விரைவான நடவடிக்கை எடுத்திடுமாறு வலியுறுத்தியுள்ளார்.
ஊழல் அதிமுகவினரைக் காப்பாற்றுவதற்கு ஆளுநர் ரவி துடித்ததை அறிய முடிகிறது. யாரைக் காப்பாற்றுகிறார் ஆளுநர்? 'குட்கா' வியாபாரிகளிடம் பணம் பெற்ற கூட்டத்தைக் காப்பாற்றுகிறார்.
புதுக்கோட்டை விஜயபாஸ்கர், ரமணா ஆகியோர் மீது நீதிமன்ற விசாரணையைத் தொடங்குவதற்கு சிபிஐ அனுமதி கோருகிறது. மாநில அமைச்சரவையும் அனுமதி வழங்கி விட்டது. ஆனால், ஆளுநர் 12.9.2022 முதல் அனுமதி தராமல் இழுத்தடித்துக் கொண்டு இருக்கிறார்.
இதில் தொடர்புடைய ஐபிஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி தராமல் ஒன்றிய பாஜக அரசு இழுத்தடித்து வருகிறது.
அதிமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க விடாமல் ஆளுநர் ரவி தடுத்து வருகிறார். இவர்கள்தான் ஊழல் ஒழிப்பைப் பற்றி வாய் கிழியப் பேசுகிறார்கள். கடிதம் அனுப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.
ஏற்கெனவே ஆன்லைன் ரம்மிக்கு எதிரான சட்டத்தை கிடப்பில் போட்டு வைத்திருந்தார் ஆளுநர். இப்போது குட்கா மாமூல் பேர்வழிகளைக் காப்பாற்றுகிறார். இதையெல்லாம் மறைப்பதற்காகத்தான் சனாதன வேஷம் கட்டி ஆடுகிறார் ஆளுனர்” என விமர்சிக்கப்பட்டிருந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“