நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வண்டுவாஞ்சேரி சரபோஜிராஜபுரத்தில் நடந்த தடுப்பூசி முகாமில் அலமேலு என்ற மூதாட்டி தவறுதலாக ஒரே நாளில் 2 முறை தடுப்பூசி போட்டுக்கொண்ட நிகழ்வு சுகாதாரத்துறையினர் இடையே கவனத்தைப் பெற்றுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று நோயைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடுவது தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஒவ்வொரு கிராமங்களிலும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தி தடுப்பூசி போட்டு வருகின்றனர். இந்த கொரோனா தடுப்பூசி, ஒருவருக்கு முதல் தவனை போட்ட பிறகு, கோவிஷீல்டு தடுபூசி இரண்டாவது தவனை 84 இடைவெளியிலும், கோவாக்ஸின் தடுப்பூசி இரண்டாவது தவனை 1 மாத இடைவெளியிலும் போட்டுக்கொள்ளப்படுகிறது. ஆனால், வேதாரண்யம் அருகே அலமேலு என்ற மூதாட்டி தவறுதலாக ஒரே நாளில் 2 தடுப்பூசி போட்டுகொண்ட நிகழ்வு சுகாதாரத்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள வண்டுவாஞ்சேரி சரபோஜிராஜபுரத்தில் ஆகஸ் 17ம் தேதி கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இந்த தடுப்பூசி முகாமில் பெரிய திடல் பகுதியைச் சேர்ந்த விவசாய தொழிலாளியான அலமேலு என்ற 70 வயது மூதாட்டி கோவிஷீல்டு தடுப்பூசி போட்டு கொண்டார்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட அலமேலு தடுப்பூசி முகாம் அருகே உள்ள மரத்தடியில் அமர்ந்திருந்தார். அப்போது, ஆண்கள் வரிசையில் கூட்டம் குறைவாக இருந்ததால், ஆண்கள் வரிசையில் பெண்களும் தடுப்பூசி போட்டு கொள்ளுங்கள் என்று அங்கே இருந்த சிலர் கூறியிர்க்கிறார்கள். தடுப்பூசி போட வந்த மக்கள் சிலர், அலமேலு ஏற்கெனவே தடுப்பூசி போட்டது தெரியாமல் அவரை தடுப்பூசி போட்டுக்கொள்ள வரிசையில் அனுப்பி வைத்துள்ளனர். மூதாட்டி அலமேலு, முகாமில் 2 தடுப்பூசி போடுவார்கள் என்று நினைத்து வரிசையில் சென்றுள்ளார். அவருக்கு மீண்டும் தடுப்பூசி போடப்பட்டது.
ஒரே நாளில் 2 தடுப்பூசி போட்டுக்கொண்ட மூதாட்டி அலமேலு, வீட்டுக்கு சென்று தனக்கு 2 கொரோனா தடுப்பூசி போட்டார்கள் என்று தனது மகளிடம் கூறியிருக்கிறார். அலமேலுவுக்கு தவறுதலாக ஒரே நாளில் 2 தடுப்பூசி போட்ட விவகாரம் சுகாதாரத் துறையினர் கவனத்துக்கு சென்றதையடுத்து, வேதாரண்யம் பகுதி சுகாதார துறையினர் ஆகஸ்ட் 17ம் தேதி மாலை அலமேலு வீட்டுக்கு சென்று விசாரித்தனர். விசாரணையில், அலமேலுவுக்கு 2 கொரோனா தடுப்பூசி போடப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அலமேலுவை உடனடியாக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற சுகாதாரத்துறையினர் அவரை தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளனர். மருத்துவமனையில் இதுவரை அலமேலு நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"