திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வருபவர் பேராசிரியர் க. அன்பழகன். உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தால் கட்சியின் முக்கிய கூட்டங்களை தவிர மற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று இரவு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. இதை அறிந்த திமுக தலைவர் ஸ்டாலின் உடனடியாக அப்போலோ மருத்துவமனை சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.
இந்த தகவல் திமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்தபோது சிறுநீரக தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் மருத்துவமனைக்கு சென்று அன்பழகன் உடல்நலம் குறித்து விசாரித்தார். பின்னர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பொதுச்செயலாளர் பேராசிரியர் நேற்றிரவு காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை மேற் கொள்ளப்பட்டு வருவதால் உடல்நலம் தேறி நலமுடன் இருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டொரு நாட்களில் உடல்நலம் தேறி இல்லம் திரும்ப இருப்பதால் கழக நிர்வாகிகள்-தோழர்கள் எவரும் நேரில் வரவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.