மழைக்கு பின்னர் பள்ளியின் வகுப்பறைகளில் மழை சேதம் குறித்து முழுமையாக ஆய்வு செய்த பின்னர் மட்டுமே, மாணவர்கள் பள்ளியில் அனுமதிக்கப்படுவார்கள் என பள்ளிகல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
திருச்சி ஜங்கஷனில் உள்ள இ.ஆர் .மேல்நிலைப் பள்ளியில், அரசு பொதுத் தேர்தவில் முதல்
இடங்களை பிடித்த மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பரிசுகளை வழங்கினார். அதன் பின்னர், அன்பில் கிராமத்தில் நடைபெற்ற நாட்டு நலப்பணித் திட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு அன்பில் அறக்கட்டளையின் சார்பாக பரிசு பொருள்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், மண்டல தலைவர் மதிவாணன், மாமன்ற உறுப்பினர் தசரதன் தங்கலட்சுமி, பள்ளியின் தலைமை ஆசிரியர் எம்.எ.ரமேஷ்குமார், பள்ளியின் செயலர் ராகவன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், "இந்தியாவிலேயே நாட்டு நலப்பணி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலம் தமிழ்நாடு தான். மாணவர்கள் தங்களது தனி திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் தங்கள் நண்பர்களின் பாடம் தொடர்பான சந்தேகங்களை விளக்கி அவர்களையும் தேர்வில் வெற்றிபெறச் செய்ய வேண்டும். முதலமைச்சர் கூறுவது போன்று மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்" எனக் கூறினார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, மழை பாதிப்பு மற்றும் பள்ளி திறப்பு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், "புயல் மழை ஓய்ந்த பிறகு, பள்ளி கட்டடங்கள் எந்த நிலையில் இருக்கிறது என்பதை ஆய்வு செய்த பின்பு வகுப்பறைகளை திறக்க வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், வகுப்பறைகள் அனைத்தும் மாணவர்கள் கல்வி கற்க ஏதுவாக இருக்கிறதா என்பதை ஆராய்ந்த பின்னர் தான், மாணவர்கள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள். வகுப்பறைகள் சேதமடைந்திருந்தால் அவை முற்றிலும் சீரமைக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“