தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய பாசன அமைப்பு மற்றும் வாய்கால்களில் 1,071 பணிகளாக 6179.60 கி.மீ. நீளத்திற்கு ரூ.120 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் உள்ள பாசன ஆதாரங்களைச் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் தூர்வாரும் வகையில் மொத்தம் 115 பணிகள் 343 கி.மீ. நீளத்திற்கு ரூ.16.70 கோடியில் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் திருச்சி மாவட்டத்தில் ஒரு லட்சத்து18 ஆயிரத்து 258 ஏக்கர் நிலங்களின் பாசன வசதி பெறும்.
இத்திட்டத்தில் சூரியூர் புது குளத்தில் இருந்து பிரிந்து வரும் காட்டரான கும்பக்கோடி நற்கடல் குடி, சோழமாதேவி வரை வந்து அதற்குப் பிறகு உய்ய கொண்டான் ஆற்றில் கலக்கிறது. அந்த காட்டாற்றை குண்டூர் - நவல்பட்டு 100 அடி சாலையின் கீழ்புறம் பகுதியில் காட்டாற்றில் நெடுகை 9,200 மீ, முதல் 11,200 மீ. வரை சுமார் 2,000 மீ. தூரம் தூர் வாரும் பணியில் நடைபெறுகிறது. இதில் முதல் 1,000 மீட்டருக்கு ரூ.25 லட்சமும் அடுத்த 1,000 மீட்டர் தூரத்திற்கு ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் தூர் வாரும் பணியினை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார். இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.
இந்த விழாவில் நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் சிவகுமார், செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் மேனகா, திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கங்காதரன், திமுக நிர்வாகி கயல்விழி மற்றும் அரசு அதிகாரிகளும், பொதுமக்களும், திமுக நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்