போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நடத்திய பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாததால் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம், இடைநிலை ஆசிரியர்கள், அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற நலச் சங்கத்தினர் சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. ஒரு வாரமாக நடைபெற்று வரும் போரட்டத்தில் சுமார் 7000 ஆசிரியர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.
இந்தநிலையில், போரட்டத்தில் ஈடுபட்டு ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். அமைச்சர் இல்லத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஆசிரியர்கள்களின் பல்வேறு கோரிக்கைகள் ஆலோசிக்கப்பட்டன.
ஆனால், பேச்சுவார்த்தை எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனையடுத்து போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.
மேலும், நல்ல அறிவிப்பு வந்தால் உடனடியாக போராட்டத்தை வாபஸ் பெறுவோம். இல்லை எனில் போராட்டத்தை தொடருவோம் என இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராபர்ட் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“