தந்தையால் முடியாததை சாதித்த தனயன்; திமுக திருச்சி மாவட்ட பொறுப்பாளர் ஆன அன்பில் மகேஷ்

திமுகவின் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளராக அன்பில் மகேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட செயலாளராக பதவி வகித்த அவருடைய தாத்தா அன்பில் தர்மலிங்கத்திற்குப்...

திமுகவின் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளராக அன்பில் மகேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட செயலாளராக பதவி வகித்த அவருடைய தாத்தா அன்பில் தர்மலிங்கத்திற்குப் பிறகு மாவட்ட செயலாளராக மத்திய மண்டலத்தில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.

ஆரம்ப காலத்தில் திருச்சியின் திமுக முகமாக அன்பில் தர்மலிங்கம் இருந்தார். இவர்தான் அப்போதைய ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட செயலாளராகவும் இருந்தார். அவருக்குப் பிறகு திருச்சி மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வந்தார். பின்னர், திமுகவின் நிர்வாக வசதிக்காகவும் கட்சியில் மதிப்பு மிக்க மாவட்ட செயலாளர் பதவிக்கு இருக்கும் போட்டிகளை சரி செய்வதற்காகவும் திருச்சி தெற்கு வடக்கு என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு திருச்சி தெற்கு மாவட்ட செயலாளராக கே.என்.நேரு நியமிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, கே.என்.நேரு 28 ஆண்டுகளாக தொடர்து மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். இடையில் அமைச்சராகவும் இருந்தார். ஆனால், அன்பில் தர்மலிங்கம் மகன் அன்பில் பொய்யாமொழி மு.க.ஸ்டாலின் உடன் நெருக்கமாக இருந்தாலும் நேருவின் செல்வாக்கைத் தாண்டி மாவட்ட செயலாளராக முடியவில்லை.

திமுகவில் மாவட்ட செயலாளர் என்பது மிகவும் மதிப்பு மிக்க பதவி. ஒரு மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் கட்சியின் வேட்பாளர்களை பரிந்துரை செய்வதில் இருந்து அவர்களை வெற்றி பெற வைப்பது வரை எல்லாமே மாவாட்ட செயலாளரே பொறுப்பு. அதற்காக அவர் அனைவரையும் அரவணைத்து சென்று களத்தில் பணியாற்ற வேண்டும்.

அத்தகைய மாவட்ட செயலாளர் பதவிக்கு, அன்பில் தர்மலிங்கத்துக்குப் பிறகு, அன்பில் பொய்யாமொழி முயற்சி செய்தும் அவருக்கு கிடைக்கவில்லை. அதன் பிறகு, அவருடைய மகன் அன்பில் மகேஷ் அரசியலுக்கு வந்துவிட்டார்.

இந்த சூழலில்தான் திருச்சி மாவட்ட செயலாளர் கே.என்.நேரு திமுகவின் முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். இதனையடுத்து, திமுக தலைமைக்கு திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு வேறு ஒருவர் நியமனம் செய்யப்பட வேண்டியிருந்தது.

கே.என்.நேரு திமுகவில் முதன்மை செயலாளராக ஆனாலும் திருச்சி திமுகவை தனது கைக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக கட்சித் தலைமைக்கு தனது ஆதரவாளர்களான மாநகரச் செயலாளர் அன்பழகன், வழக்கறிஞர்கள் பாஸ்கரன், வைரமணி ஆகியோரின் பெயர்களைப் பரிந்துரை செய்தார்.

அதேநேரம், தி.மு.க தலைவர் ஸ்டாலின் குடும்பத்துடன் தனக்குள்ள நெருக்கத்தின் மூலம் அன்பில் மகேஷும் மா.செ பதவிக்கு காய் நகர்த்தினார். `என் தாத்தா அன்பில் தர்மலிங்கத்துக்குப் பிறகு, தங்கள் குடும்பத்தில் யாரும் மாவட்டச் செயலாளராக இல்லை. எனவே, எனக்கு மாவட்டச் செயலாளர் வாய்ப்பு வழங்க வேண்டும்’ எனக் கோரிக்கை வைத்தார்.

இதனால், திமுக தலைமைக்கு சங்கடம் ஏற்பட்டது. அனைத்து தரப்பையும் திருப்திப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், ஏற்கெனவே, திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு என்றிருந்த திருச்சி மாவட்ட திமுகவை மூன்றாகப் பிரித்து அவற்றுக்கு புதிய மாவட்டச் செயலாளர்களை திமுக தலைமை அறிவித்துள்ளது.

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முசிறி, துறையூர் மற்றும் மண்ணச்சநல்லூர் உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது திருச்சி வடக்கு மாவட்டம் என்றும் அதன் மாவட்டச் செயலாளராக காடுவெட்டி தியாகராஜன் நியமிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

திருச்சி மேற்கு, ஶ்ரீரங்கம் மற்றும் லால்குடி உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய திருச்சி மத்திய மாவட்டத்துக்கு லால்குடியைச் சேர்ந்த தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் வைரமணியை மாவட்டச் செயலாளராக நியமித்து அறிவித்துள்ளார்.

அதே போல, திருவெறும்பூர், மணப்பாறை மற்றும் திருச்சி கிழக்கு உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய திருச்சி தெற்கு மாவட்ட செயலாளராக எம்.எல்.ஏ அன்பில் மகேஷ் நியமிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். தற்போது, திருவெறும்பூர் எம்.எல்.ஏ.வாக உள்ள அன்பில் மகேஷ் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளராக அறிவிக்கப்பட்டதை அவரின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அன்பில் தர்மலிங்கத்துக்கு அடுத்து அவருடைய மகன் அன்பில் பொய்யாமொழி திருச்சி மாவட்ட செயலாளராக முயன்றார். ஆனால், அவரால் முடியாமல் போனது. ஆனால், அவருடைய மகன் திருச்சி மாவட்ட செயலாளர் பதவியைப் பிடித்து தந்தையால் முடியாததை தனயன் சாதித்துக் காட்டியுள்ளதாக திருச்சி அரசியல் வாட்டாரங்கள் கூறுகின்றன. அதே நேரத்தில், அவர்கள், அன்பில் மகேஷ் அவருடைய தாத்தா அன்பில் தர்மலிங்கத்தைப் போல செயல்பட்டு அவருடைய இடத்தை நிரப்புவாரா என்ற கேள்வியை எழுப்புகின்றனர்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close