திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பாக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினின் 47-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம், கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மலைக்கோட்டை பகுதி சார்பில் மலைக்கோட்டை பகுதியில் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்திற்கு மலைக்கோட்டை பகுதி செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். பொதுக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாநகர செயலாளர் மு.மதிவாணன், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மற்றும் தலைமை கழகச் செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வண்ணை அரங்கநாதன், செங்குட்டுவன், லீலாவேலு, துணை மேயர் திவ்யா, வட்ட செயலாளர்கள் சிவக்குமார், ஜெயச்சந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் மோகன், ராஜேஸ், மாமன்ற உறுப்பினர் வக்கீல் பன்னீர்செல்வம், மாவட்ட மாநகர பகுதி நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்தக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தனது சிறப்புரையில் பேசியதாவது, முதல்வரின் 50 சதவீத பணியை தனது தோளில் சுமந்து கொண்டு பணியாற்றுபவர் தான் இன்று பிறந்தநாள் விழா காணும் துணை முதல்வர்.
திராவிட மாடல் ஆட்சி நடத்தக்கூடிய முதல்வர் அவர்களின் கரத்தை மக்களாகிய நீங்கள் வலுப்படுத்த வேண்டும், உங்களுடைய ஆதரவின் மூலம் அவர் உங்களுக்காக கொண்டுவரும் திட்டம் முழுமையாக உங்களை வந்து சேருகின்றது, இதனால் முழு நம்பிக்கையும் பெற்று நிம்மதியாக வாழ்கிறீர்கள், இதற்கு ஒரே காரணம் யார் என்றால் அது தமிழக முதல்வர் தான்.
மேலும் எதிர்க் கட்சியை சார்ந்தவர்கள் பேசும்போது எல்லாம் நாங்கள் இரண்டரை கோடி உறுப்பினர்களை கொண்டுள்ள இயக்கம் என்று கூறுகிறார்கள், அது அவர்கள் இயக்கம் கூறுவதில் தவறு ஏதுமில்லை, ஆனால், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் ஒட்டு மொத்தமாக வாங்கிய வாக்குகள் 89 லட்சம் வாக்குகள் மட்டும்தான். அப்படியானால் ஒரு கோடி 60 லட்சம் பேர் எங்கு சென்றார்கள் என்றால் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவளித்து தமிழக முதல்வரின் கரத்தை வலுப்படுத்தி உள்ளனர்.
மேலும் 2021-ல் தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் கூறும் பொழுது நமக்கும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக்கும் பெரியதாக வாக்கு வித்தியாசம் இல்லை என்றும் வெறும் ஒரு லட்சத்து 98 ஆயிரம் வாக்குகள் தான் என்றும் கூறுகின்றனர். ஆனால், உண்மை நிலை என்னவென்றால் திமுக கூட்டணி பெற்றது ஒரு கோடியே 74 லட்சம் வாக்குகள், ஆனால், எதிர்க்கட்சிகள் பெற்ற வாக்குகள் ஒரு கோடியே 53 லட்சம் வாக்குகள், ஏறக்குறைய 20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நாம் வெற்றி பெற்றுள்ளோம்.
இந்த முறை 34 இடங்களில் நின்று வெறும் 21 சதவீத வாக்குகள் தான் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் வளர்கிறார்களோ, தேய்கிறார்களோ என்பது நமக்கு தேவையில்லை. ஆனால், ஒட்டுமொத்தமாக அவர்களுடைய வாக்குகளும் திமுகவிற்கு தான் வாக்களிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழக முதல்வரின் அன்றாட பணியில் 50% பணியை தனது தோளில் சுமந்து கொண்டு பணியாற்றுபவர் தான் இன்று பிறந்தநாள் விழாகானும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். சிறுபான்மையினருக்காக தோளோடு தோல் நின்று உழைக்கக்கூடிய இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம். சிறுபான்மையினர் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக மக்களுக்காக உழைக்கக் கூடியவர் தான் மாண்புமிகு முதல்வர் என்றும் பேசினார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.