/tamil-ie/media/media_files/uploads/2020/03/New-Project-2020-03-14T161601.656.jpg)
anbil mahesh poyyamozhi dmk district secretary, அன்பில் மகேஷ், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, anbil mahesh lift swami pallakku, dmk it cadres controversy, சமி பல்லக்கு தூக்கிய அன்பில் மகேஷ், திமுக, சர்ச்சை dmk controversy, dmk, dmk doctrines
திமுகவின் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒரு கோயில் திருவிழாவில் சாமி பல்லக்கைத் தோளில் தூக்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியானதால் அந்த விவகாரம் திமுகவினரிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில், முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தின் பேரனும் பொய்யாமொழியின் மகனுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி தெற்கு மாவட்டத்தின் திமுக செயலாளராக நியமிக்கப்பட்டார். திருவெறும்பூர் தொகுதி எம்.எல்.ஏ-வாக உள்ள அன்பில் மகேஷ், திருச்சியில் அவர் ஒரு கோயில் திருவிழாவில் பங்கேற்று சாமி பல்லக்கை தோளில் தூக்கி சுமந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் பகிரப்பட்டது. இதை அடுத்து, அன்பில் மகேஷ் திமுகவின் கொள்கைக்கு மாறாக செயல்படுகிறார் என்று சில திமுகவினர் விமர்சித்தும், இல்லை அவர் சரியாகத்தான் செயல்படுகிறார் என்று சில திமுகவினர் அவருக்கு ஆதரவாகவும் பேச சமூக உடகங்களில் சர்ச்சையானது.
சமூக நீதி, சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, பிராமணீய எதிர்ப்பு, கடவுள் மறுப்பு ஆகியவற்றை முக்கிய கொள்கைகளாகக் கொண்டு பெரியாரின் தலைமையில் செயல்பட்ட திராவிடர் கழகத்தில் இருந்து அண்ணாவின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் உருவானது. திமுக தேர்தலில் தேர்தலில் போட்டியிட்டபோது கடவுள் மறுப்புக் கொள்கையை மக்கள் திரள் பண்பாட்டைக் கருத்தில் கொண்டு அதை தளர்த்திக்கொண்டது. திகவில் இருந்தபோது கடவுள் மறுப்பை பேசிய திமுகவின அதில் தீவிரத்தைக் குறைத்துக்கொண்டனர். அண்ணா ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று கூறினார்.
பெரியார் பிள்ளையார் சிலையை உடைக்கும் போராட்டத்தை நடத்தியபோது அண்ணா நான் பிள்ளையாரையும் உடைக்கமாட்டேன் பிள்ளையாருக்கு தேங்காயையும் உடைக்கமாட்டேன் என்று கூறினார்.
திமுக ஆட்சிக்கு வந்தபோது, திமுகவின் முக்கிய தலைவர்கள் பலரும் கோயிலுக்கு போவதை தவிர்த்தனர். ஆனால், கட்சியினர் மற்றும் அவர்களுடைய குடும்ப உறவினர்கள் கோயிலுக்கு போவதை தடுக்கவில்லை. இதுதா அன்றைய திமுக தலைவர்களின் நிலைப்பாடாக இருந்தது.
நாளடைவில், சில திமுக தலைவர் கோயிலுக்கும் கோயில் விழாக்களுக்கும் செல்லத் தொடங்கினர். ஆனாலும், மறைந்த திமுக தலைவர்கள் கருணாநிதி, அண்பழகன் போன்றோர் தங்களுடைய கொள்கையில் அப்படியே இருந்தனர்.
திமுகவின் ஆரம்ப கட்ட தலைவர்கள் தலைமுறை மெல்ல மறைந்துவரும் நிலையில், திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்தில் அதிலும் தற்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா கோயில்களுக்கு சென்று வழிபடுவது என்பது வழக்கமானது. அந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகும்போதெல்லாம் இந்த சர்ச்சை எழுந்து விவாதமாகி மறையும்.
இந்த வரிசையில், அன்பில் மகேஷ் சாமி பல்லக்கை தூக்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சாமி பல்லக்கை தூக்கிச் சென்றது மட்டுமில்லை. பிராமண எதிர்ப்பை பேசும் மரபு கொண்ட திமுகவின் மாவட்ட செயலாளர் அந்த பல்லக்கில் பூஜை செய்ய அமர்ந்திருக்கும் ஒரு பிராமணரையும் சேர்த்து தூக்கிச் செல்கிறார் என்று திமுகவில் ஒரு குழுவினரும், திகவினரும் விமர்சித்துள்ளனர்.
இதற்கு ஃபேஸ்புக்கில் திமுக ஆதரவு பதிவர் சௌமியன் வைத்தியநாதன் என்பவர், அன்பில் மகேஷை ஆதரித்து பதிவிட்டுள்ளார். அதில், “திமுகவின் கொள்கைகளில் இறை மறுப்பு என்பது எங்குமே சுட்டிக் காட்டப்படவில்லை..! அது திகவில் மட்டுமே இருக்கக் கூடிய கொள்கை. அதேப் போன்று திகவைப் போல் தேர்தல் அரசியலில் பங்கெடுக்காத இயக்கம் அல்ல திமுக..!” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், “திமுகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் இப்படி லட்சக் கணக்கான மக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு செயல்படுவது, திமுகவின் வாக்கு வங்கியைக் கூட்டிடவே செய்யும்..! அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தது தவறே இல்லை..! ஓட்டு வேணும்ன்னா ஒவ்வொரு பொறுப்பாளரும் இப்படிச் செய்வது தான் ஒரே வழி..! இதில் எந்த கொள்கை பிறழ்வும் இல்லை. அப்படி கொள்கை பிறழ்வு இருந்தால் திமுக சட்ட திட்ட வரமுறையிலிருந்து அதை தயவு செய்து எடுத்துக் காட்டவும்..!” என்று அன்பில் மகேஷை ஆதரித்துள்ளார்.
சௌமியன் வைத்தியநாதன் பதிவில், ” ஒருவரு திமுக சுயமரியாதை இயக்கம். மனிதனை தூக்குவது சுயமிரியாதையா?.. இதை அன்பிலார் எற்று கொள்வாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கிராமங்களில் திருவிழாக்கள் நடைபெறுகிறபோது எம்.எல்.ஏ-வுக்கு கோயில் திருவிழாக்களில் மரியாதை வழங்குவதும் ஏற்றுக்கொள்வதும் சாதாரண விஷயம் என்று ஒரு பதிவர் அன்பில் மகேஷுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார்.
அன்பில் மகேஷ் சாமி பல்லக்கு தூக்துவது போல வெளியாகியுள்ள இந்த புகைப்படம் பற்றி அதிகாரப்பூர்வமான செய்தி எதுவும் வெளியாகாத நிலையில், இந்தப் படம் பழைய புகைப்படம் என்றும் அதை மாஃபிங் செய்து அன்பில் மகேஷுக்கு எதிரானவர்கள் வெளியிட்டு சர்ச்சை ஏற்படுத்தியுள்ளனர் என்று சிலர் தெரிவித்துள்ளனர். எப்படியோ, இந்த புகைப்படம் குறித்து சமூக ஊடகங்களில் திமுகவினர் மற்றும் திமுக ஆதரவாளர்கள் கடுமையாக காரசாரமாக விமர்சித்து விவாதித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.