திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே துவாக்குடிமலை அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அரசு மாதிரி பள்ளி இயங்கி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் முதல்வர் ஸ்டாலின் இந்த பள்ளியை தொடங்கி வைத்தார். இந்த பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆண்கள், பெண்கள் இருவருக்கும் தனித்தனி விடுதி வசதியுடன் வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த பள்ளியில் 12-ம் வகுப்பு, பயோ சி.எஸ்.சி பிரிவில் படித்து வரும் யுவராஜ் வயது 17 என்பவர் தற்கொலை செய்து கொண்டார். விடுதி அறையில் உள்ள ஃபேனில் கேபிள் ஒயரை மாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் அறிந்த துவாக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து போன யுவராஜ் உடலை கைப்பற்றி துவாக்குடி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்த மாணவர் வேலூர் மாவட்டம் கொடிய நத்தம் வசந்த நகர் எம்.குப்பம் பகுதியைச் சார்ந்த பலராமன் என்பவரின் மகன் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
முன்னதாக, இதே பள்ளியில் படித்து வந்த திருவள்ளூரைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி கிருத்திகா கடந்த ஜூன் 11-ஆம் நாள் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதைத் தொடர்ந்து அனைத்து அறைகளிலும் உள்புறமாக தாழிடும் வசதி அகற்றப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த மாதம் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சொந்த தொகுதியில் ஓரிரு மாதத்தில் இரண்டு உயிர்கள் பலியாகி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விமர்சனங்களை உருவாக்கி உள்ளது. இந்த மரணங்களை கண்டித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருவெறும்பூரில் அமைந்துள்ள அரசு மாதிரிப் பள்ளியில் முன்னறிவிப்பில்லா ஆய்வை மேற்கொண்டார். மாணவரின் மரணம் குறித்து கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கேட்டறிந்து, பள்ளி மாணவர்களிடமும் கலந்துரையாடினார். மாணவர் பயின்று வந்த வகுப்பில் உள்ள மற்ற மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் விதமாக ஊக்கமளிக்கும் உரை போன்ற நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
செய்தி: க.சண்முகவடிவேல்.