சனாதன சர்ச்சைகளுக்கு மத்தியில், தமிழக அரசின் பள்ளி பாடப் புத்தகத்தில் சனாதனம் குறித்து கருத்துக்கள் இடம்பெற்றிருந்தது குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்த நிலையில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துக் கொண்ட தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை எதிர்க்கக் கூடாது. கொசுக்கள், டெங்கு, மலேரியா போன்றவற்றை ஒழிப்பது போல், சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என்று கூறினார். இது இந்தியா முழுவதும் சர்ச்சையானது.
இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜ.க இதற்கு கடுமையாக எதிர்வினையாற்றியது. உதயநிதியின் கருத்தை இனப்படுகொலைக்கான அழைப்போடு பா.ஜ.க ஒப்பிட்டு, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியது.
அதேநேரம் தி.மு.க தரப்பில், சாதிப்பாகுப்பாட்டிற்கு மூலக் காரணமாக இருப்பதால் சனாதன தர்மத்தை எதிர்க்கிறோம் என்றும், இந்து மதத்திற்கு எதிரானவர்கள் கிடையாது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதற்கிடையில், தமிழக அரசின் தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள, பள்ளி பாடப் புத்தகத்தில் சனாதனம் குறித்த கருத்துக்கள் இடம்பெற்றிருப்பது சமூக ஊடகங்களில் வைரலானது.
இதனையடுத்து, சனாதன தர்மம் என்றால் நிலையான தர்மம் என்று 12 ஆம் வகுப்பு பள்ளிப் பாடப்புத்தகத்தில், இடம்பெற்றிருந்த கருத்துக்களை பகிர்ந்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்தார்.
செப்டம்பர் 12 ஆம் தேதி, அண்ணாமலை 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகப் பாடத்திட்டத்தின் படத்தைப் பகிர்ந்து, அதில் "இந்து மதம் சனாதன தர்மம், வேத சமயம் மற்றும் வைதீக சமயம் என்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. சனாதன தர்மம் என்றால் நிலையான தர்மம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு 12 ஆம் வகுப்பில் சேர்ந்து தெளிவுபெற வேண்டும் என்றும் அண்ணாமலை கூறியிருந்தார்.
Thiru Udhayanidhi Stalin & Thiru Sekar Babu claimed that Hinduism & Sanatana Dharma are different after receiving condemnation from all quarters for their call to eradicate Sanatana Dharma.
— K.Annamalai (@annamalai_k) September 12, 2023
The Class 12 textbook released by TN Govt says that Sanatana Dharma & Hinduism are the… pic.twitter.com/cbVGDixJMg
இதற்கு செவ்வாய்க்கிழமை பதிலளித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்தப் பாடத்திட்டம் கடந்த 2018 ஆம் ஆண்டு திருத்தப்பட்டது. அடுத்த ஆண்டு மறு சீராய்வு நடத்த திட்டமிட்டுள்ளோம், அதற்காக, ஒரு குழுவை அமைத்துள்ளோம். அறிவியல் அடிப்படையிலான பாடத்திட்டத்தை மக்களுக்கு வழங்க தமிழக முதல்வர் விரும்புகிறார். பாடத்திட்டத்தில் தேவையான மாற்றங்களைச் செய்வது குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது, என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.