வீட்டில் அமர்ந்து கொண்டு (work from home job) போல அரசியல் செய்பவர்கள் நாம் அல்ல, களத்தில் இறங்கி மக்களோடு மக்களாக செயல்பட்டு வெற்றியை நிச்சயம் பெறுவோம் என அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருச்சி சத்திரம்பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் அறிவாலயத்தில தி.மு.க மண்டல தொழில்நுட்ப அணி ஆலோசனை மற்றும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் தலைமை தாங்கினர்.
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில்; நாம் செய்யும் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது சாதாரணமானது அல்ல. ஆகையால் சமூக வலைதளங்களில் நம்மை பற்றி விமர்சனங்கள் பரவும்போது, அதை நாம் திசைமாற்ற வேண்டும். நாம் செய்த திட்டங்களை பரப்ப வேண்டும்.
குறிப்பாக சட்டபேரவையில் எதிர்கட்சியினர் நம்மை குறை கூறும் போது, உடனே சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் எழுந்து உங்கள் ஆட்சியில் என்ன செய்தீர்கள் என்று பேசினால், அவர்கள் அமைதியாக அமர்ந்து விடுவார்கள். அதேபோல் நீங்கள் சமூக வலைதளங்களில் நம்மைப் பற்றி விமர்சனங்களை பரப்புவோர்கள் அனைவரையும் திசை திருப்ப வேண்டும்.
வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் நாம் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான பணிகளை நீங்கள் அனைவரும் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக தமிழ்நாட்டின் இளம் வாக்காளர்கள், முதல் வாக்காளர்களை நாம் அணுகி வாக்குகள் சேகரிக்க வேண்டும். ஒரு சிலர் போல வீட்டில் அமர்ந்து கொண்டு (work from home job) போல அரசியல் செய்பவர்கள் நாம் அல்ல, களத்தில் இறங்கி மக்களோடு மக்களாக செயல்பட்டு வெற்றியை நிச்சயம் பெறுவோம் என தெரிவித்தார்.
முன்னதாக, தமிழ்நாடு துணை முதலமைச்சரும், தி.மு.க இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் 47 வது பிறந்த நாளை முன்னிட்டு பிறந்தநாள் பாடல் வெளியீட்டு விழா திருச்சி மொரைஸ் கிளாரியான் பொழுதுபோக்கு மையத்தில் நடைபெற்றது. ஒலி ஒளி தட்டினை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். பாடலை தலைமை நிலைய செயலாளரும் வீட்டு வசதி வாரிய தலைவருமான எஸ். பூச்சி முருகன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.