மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 54-வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நினைவு நாள் மௌன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அண்ணா சிலைக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்ததாவது; தமிழகம் முழுவதும் அண்ணாவின் புகழை பறைசாற்றும் விதத்தில் அமைதி பேரணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் இந்த பேரணி நடைபெற்றது.
பகுதி நேர பேராசிரியர்கள் போராட்டத்தை தொடங்கிய அன்றே காலையிலேயே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 30 மாவட்டத்தை சேர்ந்த பகுதி நேர பேராசிரியர்கள் தங்களது கருத்துக்கள் அடங்கிய மனுவை என்னிடம் அளித்தனர்.
அதனை வாங்கிக் கொண்டுதான் தமிழக முதலமைச்சர் அவர்கள் வேலூர் பயணம் மேற்கொண்டபோது ரயிலில் இதுகுறித்து பேசினேன். குறிப்பாக அவர்களது கோரிக்கைகளில் எவற்றை நிறைவேற்ற முடியும், தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் எவையெல்லாம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டோம்.
கண்டிப்பாக இது தொடர்பாக நல்ல ஒரு முடிவை முதலமைச்சரின் தலைமை அலுவலகம் எடுக்கும் கடந்த பத்து ஆண்டுகளாக எப்படிப்பட்ட போராட்டம் நடந்தாலும் யாரும் எட்டி கூட பார்க்காத, ஒரு ஆறுதல் சொல்ல கூட செல்லாதவர்கள் தான் கடந்த கால ஆட்சியில் இருந்தனர்.
ஆசிரிய பெருமக்களின் வழியையும் வேதனையும் அறிந்தவர்கள் நாங்கள், நிதிநிலைமைக்கு ஏற்ப அவர்களின் கோரிக்கை எதுவாக இருந்தாலும் அதனை படிப்படியாக நிறைவேற்றுகின்ற வண்ணம் எங்களது செயல்பாடுகள் நிச்சயம் இருக்கும். ஆசிரிய பெருமக்கள் எதற்காக வருத்தப்பட வேண்டாம். இது உங்களுக்கான ஆட்சி. பள்ளி கல்வித்துறையின் அமைச்சர் என்கிற முறையில் உங்களை கைவிடமாட்டேன்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது மாநகராட்சி 33 வார்டுகளில் ஒரு வார்டு மட்டுமே அதிமுக கவுன்சிலரை கொண்டுள்ளது. அந்த வார்டு எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எங்களுக்கும் அந்த சேலஞ்ச் தேவை. நீயா, நானா? என பார்க்கும் அளவிற்கு நாங்களும் களத்தில் இறங்கியுள்ளோம்.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் செல்லும் இடமெல்லாம் மக்களுடைய வரவேற்பும், அவர்களது முகம் மலர்ச்சியும், மகனை இழந்திருக்கிறார் என்ற அனுதாபத்தையும் பார்க்கும் பொழுது குறைந்தபட்சம் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். இரட்டை இலை சின்னம் தொடர்பான கேள்விக்கு, அது அவர்கள் கட்சி அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
இந்த நிகழ்வில் திமுக பிரமுகர்கள் மதிவாணன், கே.என்.சேகரன், கவிஞர் சல்மா, வண்ணை மண்ணை அரங்கநாதன் உள்ளிட்ட தமிழ் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என திரலானோர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தஞ்சை மண்டலத்திற்கும் பொறுப்பு வகிப்பதால் திருச்சி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு தஞ்சையிலும் திமுக சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“