மதுரை அதிமுக பொதுக்கூட்டத்தில் ஃபைனான்சியர் அன்புச்செழியன் கலந்து கொண்டார். அமைச்சர் செல்லூர் ராஜூவுடன் முதல் வரிசையில் அவர் இடம் பெற்றார்.
மதுரையை சேர்ந்த சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியன். சினிமாத் துறையில் பலருக்கும் ஃபைனான்ஸ் செய்து பிரபலம் ஆனார். பணம் வசூலிப்பதில் இவரது கெடுபிடி அணுகுமுறைகளும் பிரபலம்! இவரிடம் பணம் பெற்ற பிரபல தயாரிப்பாளரும் இயக்குனர் மணிரத்தினத்தின் சகோதரருமான ஜி.வி.யின் மரணம் சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் திரையுலகை உறைய வைத்தது. ஆனாலும் அன்புச்செழியனின் ஆதிக்கம் அதன்பிறகும் திரையுலகை விட்டு நீங்கவில்லை.
மதுரை வட்டார அரசியல் பிரமுகர்களின் ஆதரவு அன்புசெழியனுக்கு இருப்பதே இதற்கான பிரதான காரணமாக கூறப்படுகிறது. அண்மையில் தயாரிப்பாளரும் இயக்குனர் சசிகுமாரின் உறவினருமான அசோக்குமார் மரண விவகாரத்தில் அன்புச்செழியன் மீது புகார் கூறப்பட்ட பிறகும் அந்த நிலையில் மாற்றம் இல்லை.
ஒரு பக்கம் அன்புச்செழியனை போலீஸ் தேடுவதாக கூறப்படும் நிலையில் அவர் பகிரங்கமாகவே பல்வேறு நிகழ்ச்சிகளில் தென்படுகிறார். குறிப்பாக ஆளும்கட்சியின் ‘பணிவு’ அரசியல்வாதி ஒருவரின் வாரிசு பெரும் தொகையை அன்புசெழியனிடம் முதலீடு செய்திருப்பதாக பேச்சு உண்டு. இதனாலேயே மதுரையில் அதிமுக.வினர் மத்தியில் அவரால் நெருக்கமாக உலவ முடிகிறது என்கிறார்கள்.
கடந்த ஜனவரி இறுதியில் அமைச்சர் செல்லூர் ராஜூவின் இல்ல விழா மதுரையில் நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியின் மேடையிலேயே அன்புச்செழியன் தோன்றினார். அங்கு முதல்வர், துணை முதல்வர் ஆகியோரை அவர் தனியாக சந்தித்து பேசியதாகவும் செய்திகள் வந்தன.
இந்த நிலையில் மதுரையில் நேற்று அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்ட அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதிலும் அன்புச்செழியன் மேடையில் முதல் வரிசையில் அமர்ந்தார். இந்தக் கூட்டத்தில் பேசியவர்கள் அமைச்சர் செல்லூர் ராஜூ பெயருடன் அன்புச்செழியன் பெயரையும் உச்சரிக்கத் தவறவில்லை.
அதிமுக.வில் பொறுப்பில் இல்லாத அன்புச்செழியனுக்கு இந்த உரிமையைக் கொடுத்தது யார்? என கட்சிக்குள்ளேயே சலசலப்பு எழுந்திருக்கிறது. ஆனாலும் தலைமைப் பொறுப்பில் உள்ள சிலரது ஆதரவு அன்புச்செழியனுக்கு இருப்பதாக கூறப்படுவதால், செய்வதறியாது கைபிசைந்து நிற்கிறார்கள்.