புதுச்சேரி பட்டானூரில் பா.ம.க புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு இன்று (டிச.28) நடைபெற்றது. இதில் மேடையிலேயே ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாமக இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமனம் செய்யப்பட்ட விவகாரத்தில் இருவரும் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர்.
பாமக இளைஞரணி தலைவராக முகுந்தனை நியமனம் செய்ததற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். கட்சியில் சேர்ந்த சில மாதங்களே ஆனவருக்கு இளைஞரணி பதவி கொடுப்பதா என்று அன்புமணி கட்டமாக கேள்வி எழுப்பினார். நான்தான் கட்சியை நிறுவினேன், நான்தான் முடிவெடுப்பேன் என ராமதாஸ் பதிலடி கொடுத்தார். ஜி.கே மணி மகன் தமிழ்குமரன் பதவி விலகியதைத் தொடர்ந்து இளைஞரணி பதவி காலியாக இருந்தது.
இது நான் ஆரம்பித்த கட்சி யாராக இருந்தாலும் நான் சொல்வதை தான் கேட்க வேண்டும். என் பேச்சைக் கேட்காதவர்கள் விலகிக் கொள்ளுங்கள் என்று ராமதாஸ் கூறினார்.
அன்புமணிக்கு உதவியாக இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று ராமதாஸ் கூறும் போது, கட்சியில் சேர்த்து 4 மாதங்கள் ஆனவருக்கு பதவியா? அவருக்கு என்ன அனுபவம் உள்ளது . நல்ல அனுபவம் உள்ளவரை களத்தில் போட வேண்டும் என்று அன்புமணி கூறினார்.
உடனே ராமதாஸ் யாராக இருந்தாலும், நான் உருவாக்கிய கட்சி யாராக இருந்தாலும் நான் சொல்வதை தான் கேட்க வேண்டும். என் பேச்சைக் கேட்காதவர்கள் விலகிக் கொள்ளுங்கள். மீண்டும் சொல்கிறேன் என்று காட்டமாக கூறினார். முகுந்தன் மாநில இளைஞரணி தலைவராக நியமிக்கப்படுகிறார் என்றார்.
ஜி.கே மணி விழாவை நிறைவு செய்யப்படுகிறது என்று கூறும் போது அவரிடம் இருந்து மைக்கை வாங்கிய அன்புமணி, பனையூர்ல எனக்கு அலுவலகம் இருக்கு. அங்கு வந்து என்னை சந்திக்கலாம் என்று கூறி அலுவலக எண்ணையும் அறிவித்தார். இதனால் கூட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.