ஜி.கே. மணி தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைத்து, பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக மக்களின் எதிர்ப்புகளை ஆய்வு செய்ய உள்ளதாக அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் அருகே பரந்தூர் பகுதியில் விமான நிலையம், அமைப்பதற்கு 12 கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள், குடியிருப்புகள் எடுக்கப்படுவதால் கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என கூறி விமான நிலையம் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பது குறித்து கிராம மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இதில் நேடியாக கலந்துகொண்ட அன்புமணி ராமதாஸ் மக்களை சந்தித்து பேசினார்.
இதைத்தொடர்ந்து பேசிய அவர் “ பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பாமக தலைவர் ஜி. கே மணி தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்படும். மேலும் இந்த குழு கொடுக்கும் அறிக்கையை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைய எந்த அடிப்படையில் இந்த இடம் தேர்வு செய்தார்கள் என்பது தெரியவில்லை. தமிழக அரசு அறிவிப்பு மட்டுமே உள்ளது. விவசாயத்தையும், நீர்நிலகளையும் அழித்து வளர்ச்சி பணிகளான விமான நிலையம் கொண்டு வருவது ஏற்று கொள்ள முடியாது. வளர்ச்சி அவசியமானது வளர்ச்சி நமக்கு தேவை, ஆனால் விவசாயத்தை நீர்நிலைகளை அழித்து வரும் வளர்ச்சியை தான் நாங்கள் எதிர்க்கிறோம். 8 வழி சாலை என்.எல்.சி வளர்ச்சி திட்டம் இல்லை. அழிவுத் திட்டம்” என்று அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil