இன்று(16.5.18) வெளியான பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவில் விழுப்புரம் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில், வடமாவட்டங்களின் தேர்ச்சி விகிதம் குறித்து அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. முன்பு போல் மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவ - மாணவிகளின் பெயர்கள், பள்ளியின் விவரங்கள் ஆகியவை அறிவிக்கப்படாத காரணத்தினால் இந்த தேர்வு முடிகள் எந்தவித பரபரப்பும் இன்றி அமைதியாகவே வெளியாகியது.
அதன்படி, பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.1% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் 94.1% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 87.7% தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவிகிதம் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 1% குறைந்துள்ளது. மேலும் மாவட்டம் வாயிலாகவும் தேர்ச்சி விழுக்காடு வெளியாகியுள்ளது.
இதில், 97% தேர்ச்சி விகிதத்தை விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பெற்றுள்ளது.96.3 சதவீத தேர்ச்சியுடன் ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. 96.1 சதவீத தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் மூன்றாமிடத்தை பிடித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் 83. 35% தேர்ச்சி விகிதத்தில் கடைசி இடத்தை பெற்றுள்ளது.
இதுக்குறித்து, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளார். இதுக் குறித்து அவர் பேசியதாவது, “ கடந்த ஆண்டை விட இந்தாண்டில் தேர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்திருப்பது பெரும் கவலையை அளிக்கிறது. தேர்ச்சி விகிதத்தில் கடைசி இடம் வழக்கம் போல வட மாவட்டங்களுக்குரிய ஒன்றாக மாறியிருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் 83.35% தேர்ச்சியுடன் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. இந்த மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டின் அளவைவிட 03.01% குறைந்திருக்கிறது.
இதேநிலை நீடித்தால் வடமாவட்டங்கள் கல்வியில் மேலும் பின்தங்கிவிடும் ஆபத்து உள்ளது. எனவே, அரசு பள்ளிகள் மற்றும் வடமாவட்டங்களில் தேர்ச்சி விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதற்கான காரணங்களை ஆராய்ந்து அவற்றை உடனே சரி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.