இலவச மின்சாரம் ரத்து செய்தால் விவசாயமே அழிந்து விடும்! - அன்புமணி

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ‘பி’ தரம் வழங்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை நிறுத்தக் கூடாது, மத்திய அரசின் அழுத்தத்திற்கு தமிழக அரசு பணிந்து விடக்கூடாது என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில் ‘‘தமிழ்நாட்டில் விவசாயம் உள்ளிட்ட தேவைகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுவதும், வீடுகளுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படுவதும் தான் தமிழ்நாடு மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்க காரணம் என்று மத்திய எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. வேளாண் பயன்பாட்டுக்காக வழங்கப் படும் இலவச மின்சாரத்தை நிறுத்த வேண்டும் என்பதற்கான மறைமுக அறிவுரை தான் இதுவாகும்.

மாநில மின்சார வாரியங்களின் செயல்பாடுகள் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை மத்திய எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ‘பி’ தரம் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக தமிழ்நாடு மின்வாரியம் இந்த தரத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவில் மொத்தமுள்ள 41 மின்சார வாரியங்களில் 20 நிறுவனங்கள் தமிழகத்தை விட உயர்ந்த தரத்தைப் பெற்றுள்ளன.

11 நிறுவனங்கள் தமிழகத்துக்கு இணையான தரத்தையும், 10 நிறுவனங்கள் தமிழகத்தை விட குறைந்த தரத்தையும் பெற்றுள்ளன. தமிழ்நாடு மின்சார வாரியம் இந்த அளவுக்கு பின்னடைவை சந்தித்து வருவதற்கு இலவச மற்றும் மானிய மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படுவது, மின்துறை சீர்திருத்தங்கள் விரைவுபடுத்தப்படாதது ஆகியவை தான் காரணம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

அதுமட்டுமின்றி, வணிக அடிப்படையிலான மின்சார இழப்பை கட்டுப்படுத்த வேண்டும், அனைத்து வகையான மின் இணைப்புகளுக்கும் மீட்டர் பொருத்த வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. மின்துறை சீர்திருத்தங்கள் என்று கூறினாலே, அது விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்வது தான். இப்போது மத்திய அரசு அளித்துள்ள பரிந்துரைகளின் நோக்கம் என்னவென்றால், விவசாயப் பயன்பாட்டுக்காக வழங்கப்படும் மின் இணைப்புக்கு மீட்டர் பொருத்துவதன் மூலம் ஒவ்வொரு விவசாயிக்கும் எவ்வளவு மதிப்புள்ள மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது என்பதைக் கண்டறிவது, அதன்பின்னர் இலவசமாக வழங்கப்படும் மின்சாரத்திற்கு உச்சவரம்பு நிர்ணயிப்பது, ஒரு கட்டத்திற்கு பிறகு இலவச மின்சாரத்தை ரத்து செய்வது தான்.

கடந்த காலங்களில் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய இத்தகைய முயற்சிகள் பலமுறை மேற்கொள்ளப்பட்டன. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் வெளிப்படையாகவே அறிவித்தார். கடுமையான போராட்டங்களின் மூலம் இத்தகைய முயற்சிகள் முடியடிக்கப்பட்ட நிலையில், இப்போது மீண்டும் புதிய முயற்சியை அரசு தொடங்கியுள்ளது.

இலவச மின்சாரத்தை ரத்து செய்ய கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டதை விட இந்த முறை மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சி அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில், கடந்த காலங்களில் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட போது, தமிழகத்தில் பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் மற்றும் உழவர் அமைப்புகளின் எதிர்ப்புக்கு பணிந்து, அவற்றை அப்போது தமிழகத்தை ஆண்ட கட்சிகள் நிராகரித்தன.

ஆனால், இன்றைய பினாமி எடப்பாடி பழனிச்சாமி அரசு, மத்திய ஆட்சியாளர்கள் எதை சொன்னாலும் அதை செய்து முடிக்கும் தன்மை கொண்டது என்பதால் தான் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டு விடுமோ? என்ற அச்சம் எழுகிறது. இந்த அச்சம் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

விவசாயத்துக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுவதால் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இழப்பு ஏற்படுவதாக கூறுவதே அபத்தம் ஆகும். இலவச மின்சாரம் வழங்குதல், மானிய விலையில் மின்சாரம் வழங்குதல் ஆகியவற்றால் மின்சார வாரியத்திற்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட தமிழக அரசு மானியம் வழங்குகிறது. நடப்பாண்டில் மட்டும் இதற்கான மானியமாக ரூ.7540 கோடியை தமிழக அரசு வழங்குகிறது. இதற்குப் பிறகும் மின்சார வாரியம் இழப்பில் இயங்குவதற்கு காரணம் அதன் நிர்வாகத்தில் நிறைந்துள்ள ஊழலும், நிர்வாகச் சீர்கேடுகளும் தான். அதை சரி செய்தாலே தமிழ்நாடு மின்வாரியத்தை லாபத்தில் இயங்க வைக்கலாம். அதை விடுத்து இலவச மின்சாரத்தை ரத்து செய்ய முயல்வது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாடு மின்துறை அமைச்சராக நத்தம் விஸ்வநாதன் இருந்த போது, மின்வாரியத்திற்கு மின்சாரம் கொள்முதல் செய்வதில் மட்டும் ஆண்டுக்கு ரூ.3000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றது. தேசிய சந்தையில் மின்சாரம் விலை மிகப்பெரிய அளவில் குறைந்துள்ள போதிலும், அதை கொள்முதல் செய்வதில் நடக்கும் ஊழல் மட்டும் குறையவில்லை. மின்னுற்பத்திக்கான நிலக்கரியை இறக்குமதி செய்வதிலும் பெருமளவில் ஊழல் நடக்கிறது. தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்வதால் உற்பத்திச் செலவு பெருகுகிறது. இதுபோன்ற காரணங்களால் தான் மின்சார வாரியத்திற்கு இழப்பு அதிகரிக்கிறது.

அதுமட்டுமின்றி, பல்வேறு காரணங்களால் உழவர்கள் வறுமையிலும், கடன் சுமையிலும் சிக்கிக் கொண்டிருக்கும் நிலையில், இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டால் விவசாயமே அழிந்து விடும்; உழவர்கள் தற்கொலை அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. இவை மோசமான தொடர்விளைவுகளை ஏற்படுத்தி விடும். எனவே, மத்திய அரசின் அழுத்தத்திற்கு தமிழக அரசு பணிந்து விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்வதோ, மின்கட்டணத்தை உயர்த்துவதோ கூடாது” என்று அன்புமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close