Advertisment

மேகதாது அணைக்கு தமிழகம் அனுமதி அளித்தால்.... புள்ளி விவரத்துடன் அச்சுறுத்தும் அன்புமணி!

மேகதாது அணை கட்ட செயல்படும் கர்நாடக அரசின் வஞ்சக வலையில் தமிழக அரசு வீழ்ந்துவிடக் கூடாது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மேகதாது அணைக்கு தமிழகம் அனுமதி அளித்தால்.... புள்ளி விவரத்துடன் அச்சுறுத்தும் அன்புமணி!

காவிரியில் மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்ட தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அன்புமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்டம் தமிழக அரசின் அனுமதியுடன் செயல்படுத்தப்படும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியிருக்கிறார். காவிரி பாசன மாவட்டங்களின் வாழ்வாதாரங்களை சிதைக்கும் நோக்கம் கொண்ட மேகதாது அணை திட்டத்திற்கு நயவஞ்சகமாக அனுமதி பெற கர்நாடகம் முயல்வது கண்டிக்கத்தக்கது. இந்த சதிவலையில் தமிழகம் சிக்கிவிடக் கூடாது.

தமிழ்நாட்டுக்கும், கர்நாடகத்துக்கும் இடைப்பட்ட பகுதியான மேகதாதுவில் 67.14 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணையை கட்டுவது தான் கர்நாடக அரசின் நீண்ட காலத் திட்டம் ஆகும். காவிரி ஆற்றின் குறுக்கே எத்தகைய அணையை கட்டுவதாக இருந்தாலும் கடைமடைப் பாசன மாநிலமான தமிழகத்தின் அனுமதி பெற வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும் அவற்றின் தீர்ப்புகளில் தெளிவாக கூறியுள்ளன.

அதனால் மேகதாது அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சி கைகூடவில்லை. இத்தகைய நிலையில், மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின்கட்கரியை குமாரசாமி கடந்த வாரம் டெல்லியில் சந்தித்து மேகதாது அணை திட்டம் குறித்து பேசியுள்ளார். அப்போது தமிழக அரசிடம் ஒப்புதல் பெற்று வந்தால், புதிய அணை கட்ட உடனடியாக அனுமதி அளிப்பதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. அதன் தொடர்ச்சியாகவே குமாரசாமி தமிழகத்தின் அனுமதி கோரியுள்ளார்.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அளவுக்கு அதிகமான அளவில் மழை பெய்யும் போது, தேவைக்கும் கூடுதலான தண்ணீர் கடலில் கலப்பதாகவும், மேகதாதுவில் அணை கட்டி அதை தேக்கி வைத்தால் தமிழகத்துக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று குமாரசாமி கூறியிருப்பது தமிழகத்தை ஏமாற்றுவதற்கான முயற்சி ஆகும். மேகதாதுவில் புதிய அணை கட்டுவது தமிழகத்துக்கு எந்த வகையிலும் பயனுள்ளதாக அமையாது. மாறாக பாதகமாகவே அமையும்.

உதாரணமாக கர்நாடகத்தில் அண்மையில் கொட்டிய தொடர்மழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து ஜூலை மாதத்தில் மட்டும் 80 டிஎம்சிக்கும் கூடுதலான தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதில் சுமார் 70 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. 67 டிஎம்சி கொள்ளளவுள்ள மேகதாது அணை மட்டும் கட்டப்பட்டிருந்தால், தமிழகத்துக்கு 10 டிஎம்சி தண்ணீர் கூட கிடைத்திருக்காது. இப்போது மேட்டூர் அணைக்கு வந்த தண்ணீர் முழுவதும் மேகதாது அணையில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். இனிவரும் காலங்களில் மேகதாதுவில் புதிய அணை கட்டப்பட்டாலும் காவிரி பாசன மாவட்டங்களுக்கு தண்ணீர் கிடைக்காது.

கர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை நதிகளின் குறுக்கே இப்போதுள்ள அணைகளின் கொள்ளளவு 104.59 டிஎம்சி ஆகும். இவ்வளவு கொள்ளளவுள்ள அணைகள் இருக்கும் போதே கர்நாடக அரசு தமிழகத்துக்கு தண்ணீர் தருவதில்லை. 67.14 டிஎம்சி கொள்ளளவுள்ள மேகதாது அணையும் கட்டப்பட்டால் கர்நாடக அணைகளின் கொள்ளளவு 171.73 டிஎம்சியாக அதிகரிக்கும்.

அதுமட்டுமின்றி, இடைப்பட்ட காவிரிப் பரப்பு, நீர்நிலைகள் ஆகியவற்றையும் கணக்கில் கொண்டால் 200 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். காவிரி நீரில் கர்நாடகத்துக்குரிய பங்கு 270 டிஎம்சி தான் எனும் போது ஒரே நேரத்தில் 200 டிஎம்சி தண்ணீரைத் தேக்கி அவைக்கும் அளவுக்கு அம்மாநிலத்தில் அணைகள் கட்டப்படுவது கடைமடை பாசன மாநிலமான தமிழகத்தை மிகக்கடுமையாக பாதிக்கும்.

காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க வேண்டுமானால் அதற்கு உண்மையானத் தீர்வு மேட்டூர் அணைக்கு கீழே அதிக எண்ணிக்கையில் தடுப்பணைகளை கட்டுவது தான். காவிரியிலும், கொள்ளிடத்திலும் போதிய எண்ணிக்கையில் தடுப்பணைகள் கட்டப்பட்டால் கிட்டத்தட்ட 50 டிஎம்சி வரை தண்ணீரை சேமித்து வைக்க முடியும். தமிழகத்தில் எவ்வளவு தடுப்பணைகள் கட்டப்பட்டாலும் காவிரி நீர்ப் பகிர்வில் எந்த சிக்கலும் ஏற்படாது. இந்த உண்மைகளை தமிழக அரசு உணர வேண்டும்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அனுமதிப்பது தமிழக நலன்களுக்கு எதிரானது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்கும்படி மத்திய ஆட்சியாளர்கள் நெருக்கடி கொடுத்தால் உடனடியாக அதை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றி விடும். ஏற்கெனவே காவிரி பிரச்சினை குறித்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு தண்ணீர் தருவதாக இருந்தால் மேகேதாது அணைக் கட்டிக் கொள்வதில் எந்த ஆட்சேபணையும் இல்லை என்று கூறி தமிழகத்தின் உரிமைகளை தாரை வார்த்தது தான் தமிழக அரசு என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் தான், மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு அரசு மக துரோகம் செய்து விடுமோ என அஞ்ச வேண்டியிருக்கிறது.

மேலும் படிக்க: மேகதாது அணை திட்டம் குறித்து ஆலோசனை: தமிழகம் வரும் கர்நாடக முதல்வர்

எனவே, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு அனுமதி கோரினால் அதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்கக்கூடாது. மாறாக, காவிரி ஆற்று நீர் வீணாவதை தடுக்க தமிழகத்தில் காவிரியின் குறுக்கே, மத்திய அரசு நிதியுதவியுடன் தடுப்பணைகளை கட்ட வேண்டும்” என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Pmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment