சேலம் மேற்கு பா.ம.க., எம்.எல்.ஏ., அருள் கட்சியின் கட்டுப்பட்டை மீறியதாகக் கூறி அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி அறிவித்தார்.
பா.ம.க., ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை அடிப்படையில் எம்.எல்.ஏ., அருள் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார். எம்.எல்.ஏ., அருளுடன் பா.ம.க.,வினர் யாரும் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது, என்று அன்புமணி கூறியுள்ளார்.
இதுகுறித்து புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், ‘செயல் தலைவரான அன்புமணிக்கு ஒருவரை நீக்கும் அதிகாரம் கிடையாது. கட்சியின் தலைவர் மற்றும் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஐயாவுக்கு மட்டுமே அந்த அதிகாரம் உண்டு. செயல் தலைவருக்கு அந்த அதிகாரம் இல்லை என்பதை ஏற்கனவே பாஸ்கர், ஜெயராஜ் போன்றவர்கள் தெளிவாகக் கூறியுள்ளனர்.
ஒழுங்கு நடவடிக்கை குழு என்ற ஒன்று தற்போதைய சூழலில் இல்லை, அனைத்து கட்டுப்பாடுகளும் மருத்துவர் ஐயாவிடமே உள்ளன.
என்னை நீக்குவதற்கான அதிகாரம் பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவருக்கு இல்லை. நிறுவனர் மற்றும் தலைவராக இருக்கும் மருத்துவர் ஐயா அவர்களுக்கு மட்டுமே அந்த அதிகாரம் உண்டு. வேறு யாருக்கும் அந்த அதிகாரம் இல்லை" என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
இந்த நடவடிக்கையை எப்படிப் பார்க்கிறார் என்று கேட்டபோது, "கடந்த 25-30 ஆண்டுகளாக நான் அன்புமணி ராமதாஸுடன் தொடர்ந்து மகிழ்ச்சியாகப் பயணித்து வருகிறேன். 'வருகிறார் வருகிறார்' என்று தொண்டை கிழியக் கத்தி பிரச்சாரம் செய்தவன் நான். என்னுடைய மகள் பிறந்து 28 நாட்களுக்குப் பிறகே அவளைப் பார்க்கச் சென்றேன். ஏனென்றால், அச்சரப்பாக்கத்தில் நடந்த இடைத்தேர்தலில் அன்புமணிக்கு நான் பிரச்சாரக் குழு தலைவனாக இருந்தேன். எனக்கு அன்புமணி அளித்த பரிசாகவே இந்த நடவடிக்கையைப் பார்க்கிறேன்" என்று சற்று வேதனையுடன் தெரிவித்தார்.