/indian-express-tamil/media/media_files/2025/11/02/anbumani-pucl-suresh-attack-2-2025-11-02-21-07-59.jpg)
பி.யு.சி.எல் வழக்கறிஞர் சுரேஷ் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், அறப்போர் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலியில் சட்ட விரோத கல் குவாரிகளால் அங்கே வசிக்கும் பொது மக்களுக்கும், விவசாயிகளுக்கும் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க கருத்து கேட்பு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பி.யு.சி.எல் சுரேஷ் மீது குவாரி ஆதரவாளர்களால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலியில் செயல்படும் சட்ட விரோத கல் குவாரிகள் குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில், பி.யு.சி.எல் வழக்கறிஞர் சுரேஷ் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், அறப்போர் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தென் மாவட்ட குவாரிகளில் மட்டும் ரூ.1000 கோடிக்கும் கூடுதலான கனிமக் கொள்ளை நடைபெற்றிருப்பதாக கூறிய பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், பி.யு.சி.எல். சுரேஷ் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரும் கனிமவளக் கொள்ளையால் மக்களுக்கும் உழவர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிவதற்காக நெல்லையில் இன்று நடைபெற்ற கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பி.யு.சி.எல் எனப்படும் மக்கள் சிவில் உரிமைகள் ஒன்றியத்தின் தேசிய பொதுச் செயலாளரும், மூத்த வழக்கறிஞருமான வி.சுரேஷ் மீது கனிமவளக் கொள்ளையர்களால் ஏவி விடப்பட்ட குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அடக்குமுறைகளின் மூலம் கனிமக் கொள்ளை சாம்ராஜ்யத்தை பாதுகாத்துக் கொள்ள முயலும் காட்பாதர்களின் அட்டகாசம் கண்டிக்கத்தக்கது.
நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட குவாரிகளில் மட்டும் ரூ.1000 கோடிக்கும் கூடுதலான கனிமக் கொள்ளை நடைபெற்றிருப்பதாகவும், அது குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழக அரசு எந்த விசாரணையும் நடத்தப்படாமல் தடுத்து வருகிறது. கருத்துக் கேட்புக் கூட்டங்களில் பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துகளின் வாயிலாக கனிமவளக் கொள்ளை குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தப்படும் நிலை உருவாகி விடுமோ? என்ற பதட்டம் காரணமாகவே கனிமக் கொள்ளையர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள்.
தென் மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தாதுமணல் கொள்ளை மிகப்பெரிய அளவில் நடைபெற்று வந்தது. அது குறித்தும் சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்தது. அது தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தாதுமணல் கொள்ளை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக பி.யு.சி.எல் சுரேஷை நீதிமன்றத்தின் நண்பராக (Amicus Curiae) நியமித்தது. அதன்படி ஆய்வு செய்து சுரேஷ் அளித்த அறிக்கையின் அடிப்படையில் தாதுமணல் கொள்ளை குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. அதேபோன்ற நிலை இப்போதும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே சுரேஷ் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஆட்சியும், அதிகாரமும் கைகளில் இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு கனிமவளக் கொள்ளையின் காட்பாதர்கள் இத்தகைய காட்டுமிராண்டித் தனங்களை கட்டவிழ்த்து விடலாம். ஆனால், எதற்கும் முடிவு ஒன்று உண்டு. காட்பாதர்களின் காட்டாட்சிக்கு இன்னும் சில மாதங்களில் முடிவுரை எழுதப்படும். அப்போது கனிமக் கொள்ளையர்களும், அவர்களுக்கு துணையாக இருக்கும் காட்பாதர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். அதற்கான நடவடிக்கைகளை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து மேற்கொள்ளும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவாரி தரப்பினர் செய்த திட்டமிட்ட தாக்குதல் - அறப்போர் இயக்கம் கண்டனம்
அதே போல, “திருநெல்வேலி கல்குவாரிகளால் பாதிக்கப்பட்ட மக்களின் கருத்து கேட்பு நிகழ்வில், பி.யு.சி.எல். சுரேஷ் மீதான தாக்குதல் குவாரி தரப்பினர் செய்த திட்டமிட்ட தாக்குதல்” என்று அறப்போர இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
*அறப்போர் இயக்க பத்திரிக்கை செய்தி: திருநெல்வேலி கல்குவாரிகளால் பாதிக்கப்பட்ட மக்களின் கருத்து கேட்பு நிகழ்வில் குவாரி தரப்பினர் செய்த திட்டமிட்ட தாக்குதல்*
— Arappor Iyakkam (@Arappor) November 2, 2025
திருநெல்வேலியில் கல் குவாரிகளால் மக்கள் எந்த விதமான பாதிப்புகளுக்கு உள்ளாகி உள்ளார்கள் என்பதை ஆவணப்படுத்தும் அறப்போர்… pic.twitter.com/0q3b9iP8XE
அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “திருநெல்வேலியில் கல் குவாரிகளால் மக்கள் எந்த விதமான பாதிப்புகளுக்கு உள்ளாகி உள்ளார்கள் என்பதை ஆவணப்படுத்தும் அறப்போர் இயக்க மக்கள் கருத்து கேட்பு நிகழ்வு இன்றைய தினம் (02.11.20250 திருநெல்வேலி ரோஸ் மஹாலில் நடந்தது. இந்த நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் பங்கெடுத்தனர்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் டாக்டர் வி. சுரேஷ் தலைமையில் அடங்கிய குழு மக்கள் கருத்துக்களை கேட்டு அறிந்தனர். இந்தக் குழுவில் டாக்டர் சுரேஷ் தவிர தன்னாட்சி அமைப்பு கிராம சபை வல்லுநர் நந்தகுமார், நீர் மேலாண்மை நிபுணர் உதயகுமார் , சுற்றுச்சூழல் நிபுணர் தணிகைவேல், விவசாய மேலாண்மை நிபுணர் நந்தினி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
ஏற்கனவே, திருநெல்வேலியில் கல் குவாரி முறைகேடுகளால் எப்படி ஒரு கோடிக்கும் மேற்பட்ட மெட்ரிக் டன் சட்டவிரோதமாக கனிமவள கொள்ளை நடந்தது என்பதை ஆவண ரீதியாக அறப்போர் இயக்க புகார் அளித்ததை குறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் பேசினார்.
அதிகமான கல்குவாரிகள் இருக்கக்கூடிய ராதாபுரம் பகுதியில் இருந்து பெரும்பான்மையான மக்கள் வந்து தாங்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து தெரிவித்து வந்தனர். முக்கியமாக அதிகப்படியான வெடி வெடிப்பதால் வீடுகள் அதிர்வது, நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படுவதும், குவாரி வேலைகளால் ராதாபுரம் வாய்க்காலில் தண்ணீர் வராதது மற்றும் விவசாய பாதிப்பு குறித்து மக்கள் பேசி வந்தனர். மேலும் ஆலங்குளம், பொன்னாக்குடி, கயத்தாறு, தாதநூத்து, அடைமிதிப்பான்குளம், ரெட்டியார்பெட்டி, தாழையூத்து, தச்சநல்லூர், திருவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, திசையன்விலை, அம்பாசமுத்திரம் போன்ற பல இடங்களில் இருந்தும் குவாரிகளால் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறித்தும் மக்கள் தெரிவித்தனர்.
ஆனால், கிட்டத்தட்ட 25-க்கும் மேற்பட்ட நபர்கள் உள்ளே நுழைந்து சில நிமிடங்களில் கலவரம் செய்ய முயற்சித்தனர். அவர்கள் குவாரிக்கு ஆதரவான வக்கீல்கள் என்று கூறி நிகழ்வை நடத்தவிடாமல் கலாட்டா செய்யத் துவங்கினர். நாற்காலிகளை தூக்கி எறிந்து குழு தலைவர் டாக்டர் சுரேஷ் மற்றும் சிலர் மீது தாக்குதலும் நடத்தினர்.
திட்டமிட்டு குறி வைத்து தாக்கிய இந்த தாக்குதலால் டாக்டர்சுரேஷ் தலையில் காயம் ஏற்பட்டது. கல் குவாரியால் தங்கள் கிராமத்தில் உள்ள பிரச்னையை பற்றி பேச வந்திருந்த ஒருவர் மீதும் தாக்குதல் நடத்தினர். மேலும், மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிபடுத்த கூடாது என்ற நோக்கில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் ஆளுங்கட்சி தி.மு.க-வை சேர்ந்தவர்கள் என்று கேள்விப்படுகிறோம். இது குறித்த புகாரை அறப்போர் இயக்கம் காவல்துறைக்கு அளித்துள்ளது. காவல்துறை இந்த அப்பட்டமான வன்முறை தாக்குதல் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது ? காவல்துறை உடனடியாக தாக்குதல் நடத்திய குண்டர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகளை ஆவணப்படுத்தி அறிக்கையாக அரசுக்கு சமர்பிக்கும் வேலையை அறப்போர் இயக்கம் தொடர்ந்து மேற்கொள்ளும். அடுத்த சில நாட்களில் மக்கள் சொன்ன பிரச்சனைகளை தொகுத்து அறிக்கையாக வெளிக்கொண்டு வரப் போவதாக நிபுணர் குழு தெரிவித்தது.
திருநெல்வேலியில் சட்டவிரோத கல் குவாரிகளால் மக்கள் படும் இன்னல்களை தடுக்கவும் சட்டவிரோத கல் குவாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுக்கவும் அறப்போர் இயக்கத்தின் முயற்சிகள் இன்னும் வேகமாக தொடரும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us