Advertisment

சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய ஆளுநர் ஆர்.என். ரவி; தமிழக தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

சட்டப் பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறியது குறித்து, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், வி.சி.க தலைவர் அன்புமணி ராமதாஸ், பா.ஜ.க-வைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Anbumani Thirumavalavan L Murugan

அன்புமணி ராமதாஸ், திருமாவளவன், எல். முருகன்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்றும் ஆளுநர் உரையில் தவறான தகவல்களை வாசிக்க முடியாது என்று சட்டப் பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறியது குறித்து, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், வி.சி.க தலைவர் அன்புமணி ராமதாஸ், பா.ஜ.க-வைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisment

“தமிழக அரசு -  ஆளுனர் மோதல் தொடரக்கூடாது என்றும்

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தடை ஏற்படுத்தக் கூடாது” என்றும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை தொடங்கி வைப்பதற்காக வந்த தமிழக ஆளுனர் ஆர்.என்.இரவி, அவருக்காக தயாரிக்கப்பட்ட உரையை படிக்க மறுத்திருக்கிறார். ஆளுனர் உரைக்கு முன்பாக தேசிய கீதம் இசைக்கப்படாததை கண்டித்தும், ஆளுனர் உரையில்  இடம்பெற்றுள்ள பல பகுதிகளில் தமக்கு உடன்பாடு இல்லை என்பதாலும் உரையை படிக்கவில்லை என்று ஆளுனர் குறிப்பிட்டிருக்கிறார். 

அதுமட்டுமின்றி, ஆளுனரின் உரையை முழுமையாக அவைக்குறிப்பில்  ஏற்றுவதற்கான தீர்மானத்தை அவை முன்னவர் அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்   அவையிலிருந்து வெளிநடப்பு  செய்திருக்கிறார். ஆளுனரின் இந்த செயலை ஏற்றுக்கொள்ள முடியாது.

கடந்த ஆண்டு ஆளுனர் உரையின் போது அவையில் என்னென்ன நிகழ்வுகள் நடந்தனவோ, அதே தான் இப்போதும்  தொடர்ந்திருக்கின்றன. தமிழக அரசால் தயாரிக்கப்பட்ட ஆளுனர் உரைக்கு அவரது அலுவலகம்  ஏற்கனவே ஒப்புதல் அளித்திருக்கிறது. அதேபோல், ஆளுனர் உரைக்கு முன் தேசிய கீதம் இசைப்பது தமிழக மரபல்ல என்று ஆளுனர் அலுவலகத்திற்கு தமிழக சட்டப்பேரவைச் செயலகம் சார்பில்  விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு அவையில் உரையை வாசிக்காததும்  வெளிநடப்பு செய்ததும் நியாயப்படுத்த முடியாதவை.

தமிழக அரசுக்கும், ஆளுனருக்கும் இடையிலான மோதல் புதிதல்ல.  கடந்த சில ஆண்டுகளாகவே இத்தகைய மோதல் தொடர்ந்து வருகிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக அரசும் ஆளுனரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி அரசும் ஆளுனரும் நிர்வாகம் என்ற நாணயத்தின் இரு பக்கங்கள். அரசுக்கும், ஆளுனருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டே செல்வது நல்லதல்ல. இப்போக்கு தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக  உருவாகிவிடும். இனியாவது இரு தரப்பும் நடந்ததை மறந்து தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஆளுனரும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

ஆளுநர் ஆர்.என். ரவியை வெளியேற்ற சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

வி.சி.க தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அரசியலமைப்புச் சட்ட மரபுகளுக்கு மாறாகவும், தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் வகையிலும் இன்று சட்டப் பேரவையில் நடந்து கொண்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

திட்டமிட்டே மாநில அரசோடு முரண்பாட்டைக் கூர்மைப்படுத்தி அரசியல் அரங்கில் அவ்வப்போது தேவையற்ற பரபரப்பை உண்டாக்கும் ஆளுநர், தனது பொறுப்பையும் பொறுப்புக்குரிய மாண்பையும் மறந்து ஒரு கட்சியின் பிரதிநிதியைப் போலவே செயல்பட்டு வருகிறார். எனவே, அவர் ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதோடு தமிழ்நாட்டிலிருந்தும் வெளியேற வேண்டும் என வலியுறுத்துகிறோம். 

மாநில அரசு தயாரித்துக் கொடுக்கப்படும் உரையைப் படிப்பதென்பது ஆளுநருக்கு அரசியலமைப்புச் சட்டம் விதித்துள்ள கடமையாகும். அதை இன்று ஆர்.என்.ரவி அவர்கள் நிராகரித்துள்ளார். இது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசை மட்டுமின்றி, அவர் இந்தப் பதவியை வகிப்பதற்குக் காரணமான அரசியலமைப்புச் சட்டத்தையும் அவமதிப்பதாகும். அரசியலமைப்புச் சட்டப்படி விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யாமல் தொடர்ந்து இவ்வாறு அதை அவமதித்து வரும் ஆர்.என். ரவி அவர்கள் எந்த அடிப்படையில் ஆளுநர் பதவியில் நீடிக்கிறார் என்ற கேள்வி எழுகிறது. அவர் ஆளுநர் பதவி வகிப்பதற்கு மட்டுமல்ல, இந்த நாட்டின் குடிமகனாக இருப்பதற்கும்கூடத் தகுதியற்றவர் என்பதையே அவரது செயல்கள் காட்டுகின்றன. 

ஆர்.என்.ரவி அவர்கள், தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் பொதுவெளியில் தொடர்ந்து உண்மைக்கு மாறான தகவல்களைப் பரப்பி வருகிறார். சாதியின் அடிப்படையிலும், மதத்தின் அடிப்படையிலும் மக்களைப் பிளவுபடுத்தும் வகையில் பிரிவினையைத் தூண்டும் கருத்துக்களைத் தொடர்ந்து கூறி வருகிறார். அதன் மூலம் இங்கே சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை ஏற்படுத்த முயற்சிக்கிறார் . அவர் வகிக்கும் ஆளுநர் பதவியை இப்படியான சட்ட விரோதச் செயல்களுக்குக் கவசமாகப்  பயன்படுத்துவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இத்தகைய போக்குள்ள அவர் தொடர்ந்து தமிழ்நாட்டில் இருப்பதே தமிழ்நாட்டு மக்களுக்குக் கேடாக முடியும். எனவே, அவரைத் தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு உரிய சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறோம். 

“ஆளுநர் பதவி என்பது பிரிடிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டு சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்துக்குள் தங்கிவிட்ட ஒன்றாகும். ஒன்றிய அரசால் ஆளுநர் நியமிக்கப்படுவதாகச் சொல்லப்பட்டாலும் ஒன்றிய அரசை ஆட்சி செய்யும் கட்சியாலேயே அவர் நியமிக்கப்படுகிறார். நடுநிலைக்கும் அவருக்கும் எந்தவொரு தொடர்பும் இருப்பதில்லை. தன்னை நியமிக்கும் கட்சியின் முகவராகவே அவர் செயல்படுகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்குத் தொல்லை தருவதற்கும், தமக்குப் பிடிக்காத கட்சிகளை உடைப்பதற்கும், மாநிலத்தில் நிலையற்ற தன்மையை உருவாக்குவதற்கும் ஒன்றிய அரசால் ஆளுநர் பயன்படுத்தப்படுகிறார். மாநில அரசுகளைக் கலைப்பதற்கு ஆளுநரைத்தான் ஒன்றிய அரசு பயன்படுத்துகிறது. மாநில அரசுகள் இயற்றுகிற சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்குகிற வேலையில் ஆளுநர்கள் ஈடுபடுவதைப் பார்க்கிறோம்.

மாநில அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையில் ஆளுநர் என்ற பதவி எந்தவிதத்திலும் தேவையாக இல்லை. எனவே ஆளுநர் பதவியை ஒழிக்கவேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநில அரசுகளும் தொடர்ந்து முன்வைத்துவருகின்றன.

‘இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்ததும் ஆளுநர் பதவி ஒழிக்கப்படும்’ என்ற வாக்குறுதியை தேர்தல் வாக்குறுதியாக வழங்கவேண்டும் என ‘வெல்லும் சனநாயகம்’ மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தை மீண்டும் வலியுறுத்துகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறிய நிலையில், மாநிலத்தில் ஆளும் தி.மு.க அரசு தேசிய கீதத்தை மீண்டும் ஒரு முறை அவமதித்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:  “மீண்டும் மீண்டும் - தேசிய கீதத்தை அவமானப்படுத்தும் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்..!

தமிழ்நாடு சட்டப்பேரவையில், இந்த ஆண்டுக்கான முதல் நாள், மாண்புமிகு ஆளுநர் உரையுடன் தொடங்கும் போது, ஆளுநர் அவர்கள் தேசிய கீதத்துடன் தொடங்க வேண்டும் என்று சொல்லியுள்ளார். அதைக் கூட செய்யமுடியாது என்ற தமிழக அரசின் ஆணவப்போக்கு மிகவும் கண்டனத்திற்கு உரியது.

தராசு முள்போல இருக்க வேண்டிய சபாநாயகர் அப்பாவு அவர்கள், ஆளுநர் அவர்களை அருகில் வைத்துக்கொண்டு, எதிர்க்கட்சிகளை கேள்வி கேட்கிற அமைச்சர் போல செயல்படுகிறார்.

இது தான் ஜனநாயகமா?  இப்படித்தான் மக்கள் போற்றும் சட்டப்பேரவை நடத்தப்பட வேண்டுமா?  தேசிய கீதத்தைப் புறக்கணித்து, மாண்புமிகு ஆளுநரை அவமதித்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அவமரியாதை செய்வது தான் இந்த போலி திராவிட மாடல் ஆட்சியா...?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Politics
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment