வன்னியர் இடஒதுக்கீடு: தி.மு.க அரசுக்கு எதிராக பா.ம.கவின் கண்டன ஆர்ப்பாட்டம் - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியாகி 1208 நாட்கள் கடந்தும், தமிழக அரசு அதனை செயல்படுத்தாமல் காலம் தாழ்த்துவதைக் கண்டித்து, அன்புமணி ராமதாஸ் தலைமையில் விழுப்புரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியாகி 1208 நாட்கள் கடந்தும், தமிழக அரசு அதனை செயல்படுத்தாமல் காலம் தாழ்த்துவதைக் கண்டித்து, அன்புமணி ராமதாஸ் தலைமையில் விழுப்புரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

author-image
WebDesk
New Update
pmk

வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து 1208 நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும், தமிழக அரசு அதனை செயல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வருவதைக் கண்டித்து பாமக சார்பில் விழுப்புரத்தில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாமகவினர் மற்றும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.

Advertisment

"திமுக, அதிமுக, காங்கிரஸ் வன்னிய எம்எல்ஏக்கள் முதலமைச்சருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்"
ஆர்ப்பாட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், "10.5% இடஒதுக்கீடு செயல்பாட்டுக்கு வந்திருந்தால், இன்று வன்னியர்களில் 3800 மருத்துவர்களும், 6000 பேர் அரசு வேலைகளிலும் இருந்திருப்பார்கள். திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளில் உள்ள வன்னிய சட்டமன்ற உறுப்பினர்கள் உடனடியாக முதலமைச்சரை சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

அவர் தனது உரையில் மேலும் கூறியதாவது: "அனைத்து சமுதாயங்களுக்கும் அவரவர் எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் 45 ஆண்டுகளாகப் போராடி வருகிறார். ஆனால் ஆளும் கட்சிகள் அதனைச் செய்ய மறுக்கின்றன. 1987ல் நடந்த இடஒதுக்கீட்டு போராட்டத்தில் 21 தியாகிகள் உயிர் நீத்தனர். இவர்களில் 15 பேர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். பின்தங்கிய நிலையில் இருக்கும் மக்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற அடிப்படையிலேதான் அவர்கள் தங்கள் இன்னுயிரை நீத்தார்கள்.

வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசின் அனுமதி தேவையில்லை என்றும், மாநில அரசே தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி உள் இடஒதுக்கீடு வழங்கலாம் என்றும் உச்ச நீதிமன்றமே தெளிவாகக் கூறியுள்ளது. உச்ச நீதிமன்றம் தெரிவித்த பிறகும் தமிழக அரசு தாமதம் செய்வது ஏன்? சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து உள் இடஒதுக்கீடு கொடுக்க வேண்டிய அவசியமில்லை எனவும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது. தமிழக அரசு ஏற்கனவே தன்னிடம் இருக்கும் தரவுகளை மட்டும் சமர்ப்பித்தால் போதுமானது, ஆனால் தமிழக அரசு அதனைச் செய்ய மறுக்கிறது.

Advertisment
Advertisements

pmk pmk

திமுகவிற்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் சமூக நீதிக்கும் எள்ளளவும் சம்பந்தம் கிடையாது. திமுக என்றால் வன்னியர் விரோதி, சமூக நீதிக்கு எதிரி என்றுதான் பொருள். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 45 ஆண்டுகளாகப் போராடியும் கூட இந்த சமுதாயத்திற்கு உரிய இடஒதுக்கீடு கிடைக்கவில்லை." மேலும் பேசிய அவர், "திமுகவில் 23 எம்எல்ஏக்களும், 5 எம்பிக்களும் என மொத்தம் 28 வன்னியர்கள் உள்ளனர். இவர்களுக்கு வன்னியர் என்ற உணர்வு உள்ளதா? இதில் சிலர் திறமையின் அடிப்படையில் எம்எல்ஏ, எம்பி ஆகியுள்ளனர். 

ஆனால் மற்றவர்கள் வன்னியர் என்ற சாதிய அடிப்படையில்தான் அவர்களுக்கு சீட்டு கிடைத்தது, வெற்றி பெற்றார்கள். இவர்கள் 28 பேரில் என்றாவது ஒரு நாள் முதலமைச்சரைச் சந்தித்து, 'ஐயா, எங்கள் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளார்கள். உரிய படிப்பும், வேலையும் இல்லாததால் மதுவுக்கு அடிமையாகி உள்ளனர். அவர்களுக்கு தனி இடஒதுக்கீடு கொடுத்தால் தான் இந்த சமுதாயம் முன்னேறும்' என்று நமக்காகப் பேசியிருக்கிறார்களா?

தமிழக சட்டமன்றத்தில் உள்ள 234 எம்எல்ஏக்களில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 38 வன்னிய சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் வருகின்ற கூட்டத்தொடருக்கு முன்னதாக அனைவரும் வெளியில் அமர்ந்து, 'வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்தால் தான் நாங்கள் சட்டமன்றத்திற்கு உள்ளே செல்வோம்' என்று போராட்டம் நடத்தத் தயாரா? சொல்வார்களா? சொல்ல வைக்க வேண்டும். பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் அதனைச் செய்கிறார்கள், ஆனால் மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அவ்வாறு கோரிக்கை வைக்க மறுக்கிறார்கள். இந்த இளைஞர்கள் அழுத்தம் கொடுத்தால் மற்ற சட்டமன்ற உறுப்பினர்களும் இதுகுறித்து பேசுவார்கள்" என்று அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டார்.

கடந்த அதிமுக ஆட்சியில் 10.5% இடஒதுக்கீடு கிடைத்தது பாமகவின் தொடர் போராட்டங்களின் விளைவு என்று அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டினார். "19.2.2019 அன்று அதிமுகவுடன் கூட்டணிக்குச் சென்றபோது பத்து நிபந்தனைகளை விதித்தோம். அதில் முக்கியமான நிபந்தனை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும். 1.11.2019 அன்று இபிஎஸ் இல்லத்திற்குச் சென்று மருத்துவர் ராமதாஸ் தலைமையில் குழுவாகச் சென்று வலியுறுத்தினோம். 

22.11.2020 அன்று வன்னியர் சங்கக் கூட்டுப் பொதுக்குழு கூட்டத்தில் இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்த திட்டமிட்டோம். 1.12.2020 அன்று டிஎன்பிஎஸ்சி முன்பு மாபெரும் போராட்டத்தை நடத்தினோம். போராட்டம் முடிந்ததும் அப்போதைய முதலமைச்சர் இபிஎஸ் அழைத்து நிச்சயம் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுக்கிறேன் என்று உத்தரவாதம் கொடுத்தார். இப்படி 2019-2021 வரை பல கட்டப் போராட்டங்களை நடத்தியதன் விளைவாகத்தான் 2021ல் 10.5% இடஒதுக்கீடு கிடைத்தது.

எனக்கு 10.5% உடன்பாடு கிடையாது. ஏனென்றால் வன்னியர்கள் மொத்தம் 18 சதவீதம் உள்ளனர். பட்டியலின மக்கள் மூன்று பிரிவினரும் சேர்ந்தால்தான் 20 விழுக்காடு, ஆனால் வன்னியர்கள் தனித்தே 18 விழுக்காடு உள்ளனர். எனவே இந்த 10.5% இடஒதுக்கீடு எல்லாம் முதற்கட்டம் மட்டும்தான். தனித்து வன்னியர்களுக்கு 18% இடஒதுக்கீடு வேண்டும். வேறு வழியில்லாமல் அன்றைக்கு நாங்கள் ஏற்றுக்கொண்டோம். அதனால் தான் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கச் சொல்லி நாங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம். சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தால் தான் எந்தெந்த சமுதாயம் எவ்வளவு மக்கள் தொகை இருக்கிறது என்ற புள்ளி விவரங்கள் முழுமையாகத் தெரியவரும்" என்று அவர் விளக்கினார்.

"10.5% இடஒதுக்கீடு ஓராண்டு மட்டும் அமலில் இருந்தது. அது மட்டும் தொடர்ந்திருந்தால், இன்று வன்னியர்களில் 3800 பேருக்கு எம்பிபிஎஸ் கிடைத்திருக்கும், 800 பேருக்கு மருத்துவப் பட்டம் (மேற்படிப்பு) கிடைத்திருக்கும், 6000 பேருக்கு பொறியியல் கல்லூரிகளில் சீட்டு கிடைத்திருக்கும், 6000 பேருக்கு தமிழக அரசின் பல்வேறு பணியிடங்களில் வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும், 80 ஆயிரம் மாணவர்களுக்கு கலை அறிவியல் கல்லூரிகளில் சீட்டு கிடைத்திருக்கும். இந்த சீட்டுகளும், வேலைவாய்ப்பும் வன்னியர்களுக்கு கிடைக்காமல் போனதற்கு திமுக அரசாங்கம்தான் காரணம். எனக்கு வயிறு எரிகிறது. இவ்வளவு புள்ளிவிவரங்கள் இருந்தும் எதுவுமே நடக்கவில்லை. 

முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக என்னிடம் வாக்குறுதி கொடுத்தார், 'நான் நிச்சயம் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கிறேன்' என்று சொன்னார், ஆனால் செய்யவில்லை. 2019 விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது? 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கொடுப்போம்' என்று சொன்னீர்களே, ஏன் செய்யவில்லை? ஸ்டாலின் அரசு வன்னியர்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்து கொண்டிருக்கிறது. இது முதல் கட்ட ஆர்ப்பாட்டம். அடுத்ததாகச் சிறை நிரப்புகின்ற போராட்டத்தை நடத்த உள்ளோம். அதற்குப் பிறகும் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கவில்லை என்றால் எங்களுக்குத் தெரிந்த 'அந்தப் போராட்டம்' தான். அனைவரும் தயாராக இருக்கிறீர்களா?" என்று மக்களைப் பார்த்து அன்புமணி ராமதாஸ் கேட்டார்.

"மூன்று ஆண்டுகளாக உங்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கிறோம், கொடுக்கிறோம் என்று திமுக அரசு பொய் சொல்லி ஏமாற்றி வந்தது. கடைசி நேரத்தில் இப்போது கொடுக்க முடியாது என்று சொல்கிறார்கள். ஜனார்த்தனன் ஆணையம் 180 நாட்களில் இஸ்லாமியர்களுக்கு 3.5% உள் இடஒதுக்கீடு வழங்கியுள்ளது. அதே ஜனார்த்தனன் ஆணையம் அருந்ததியர்களுக்கு 3% உள் இடஒதுக்கீட்டை 243 நாட்களில் வழங்கியது. ஆனால் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தும் 1208 நாட்கள் ஆகியும் தமிழக அரசு வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க மறுக்கிறது" என்று அவர் குற்றம் சாட்டினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களைப் பார்த்து, "உங்கள் வீட்டிற்குச் சென்றதும் தெருத்தெருவாகச் சென்று பிரச்சாரம் செய்யுங்கள், 'வன்னியர் விரோதி திமுக' என்று. 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒரு வன்னியர் கூட திமுகவிற்கு வாக்களிக்கக் கூடாது" என்று அன்புமணி ராமதாஸ் அறைகூவல் விடுத்தார்.

Anbumani Ramadoss Pmk

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: