கோவை போத்தனூர் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் பா.ம.க சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
இதில் கலந்து கொண்ட பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேடை நிகழ்வைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ் கூறியதாவது;
தென்னிந்தியாவில் தமிழ்நாடு, கேரளா தவிர்த்த மற்ற அனைத்து மாநிலங்களும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வருகின்றன. தமிழ்நாடு அரசு உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென 44 ஆண்டுகளாக நாங்கள் கெஞ்சி வருகிறோம். ஆளுங்கட்சிகளுடன் கூட்டணியில் இருந்தாலும், இல்லையென்றாலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி அழுத்தம் தந்து வருகிறோம்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மோசமான நிலையில் உள்ளது. தூத்துக்குடி மாநகரில் இரண்டு சாலையில் மட்டும் தான் செல்ல முடியும். மற்ற சாலைகளில் செல்ல முடியாத நிலை உள்ளது. தூத்துக்குடி மக்கள் பாவப்பட்ட மக்களா? எப்போது தண்ணீரை வெளியே எடுக்க போகிறீர்கள்? மாநகராட்சி பகுதியிலேயே குடிநீர், பால் இல்லை. கிராமங்கள் மிக மோசமாக உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் தூத்துக்குடி சென்று தங்கி நிவாரண பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.
மக்களின் வாழ்வாதாரம் போய்விட்டது. நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காலநிலை மாற்றம் காரணமாக எந்த ஊருக்கு வேண்டுமானாலும் இயற்கை சீற்றங்கள் வரலாம்.
சென்னையில் மீண்டும் பெரிய வெள்ளம் வரும். வெள்ளம், புயலை தடுக்க முடியாது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் பாதிப்புகளை தடுக்க முடியும். இது அரசியல் பேசும் நேரமல்ல. மத்திய அரசு தென் மாவட்டங்களுக்கு 2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அவசர காலத்தில் மத்திய அரசு கூடுதலாக நிதி தர வேண்டும். அரசியல் பேசாமல் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
கோவையில் 50 ஆயிரம் சிறு குறு தொழில் கூடங்கள் மூடப்பட்டுள்ளது. தொழில் முனைவோரை பாதுகாக்க அரசு மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அன்புமணி கூறினார்.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“